மத்தியில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு

Read Time:2 Minute, 53 Second

மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு என சிவோட்டர்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிவோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் 8 இடங்கள் குறைவாக 264 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 141 இடங்களும், பிற கட்சிகளுக்கு 138 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. கட்சிவாரியாக பார்க்கும் போது பா.ஜனதா 220 இடங்களையும், காங்கிரஸ் 86 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிகிறது.

காங்கிரஸ் தேர்தலுக்குப் பின்னர் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐயுடிஎப்), இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்), சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் (மகாபந்தன்), திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தால், 226 இடங்கள் வரையில் வசப்படுத்தும். இதுவே பா.ஜனதாவை பொறுத்தவரையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியில் 307 இடங்களாக உயரும். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய மூன்று கட்சியின் செயல்பாட்டைத் தீவிரமாக பா.ஜனதா தீவிரமாக கண்காணிக்கும்.

3 கட்சிகளின் ஆதரவு தேசிய ஜனநாயகக் கூட்டணி கிடைத்தால் பெரும்பான்மை பெறுவது மட்டுமின்றி மக்களவையில் 300 இடங்களை கடந்துவிடும். இக்கட்சிகளின் ஆதரவு பா.ஜனதாவிற்கு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியை அமைத்துள்ளது. இக்கூட்டணி பா.ஜனதாவிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். கடந்த முறை இங்கு 71 இடங்களைப் பெற்ற பா.ஜனதா இந்த முறை 29 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பை பெறும். ஒருவேளை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி இல்லாவிட்டால் 72 இடங்களை பா.ஜனதா எளிதாக கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.