சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் வாக்குப்பதிவு தேதி மாற்றப்படுமா?

Read Time:5 Minute, 32 Second

சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக முக்கிய திருவிழாக்கள் கருத்தில் வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இம்முறை மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதம் வந்துவிட்டாலே மதுரையில் தினந்தோறும் திருவிழாதான். சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்களான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.

இதற்கு மத்தியில் தேர்தல் என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே

“திருவிழா நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதே…” என்பதுதான் மக்கள் மத்தியிலான பேச்சாக உள்ளது.

“தேர்தலைவிட உலகப் புகழ் திருவிழாவில்தான் மக்கள் கவனம் செலுத்துவார்கள், இதனால் வாக்குப்பதிவு குறையும்,” எனவும் கூறப்படுகிறது. இதுபோக வைகை மாவட்டங்களிலும்  சித்திரை திருவிழா நடைபெறும். தமிழகத் தேர்தல் ஆணையமும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.


பாதுகாப்பு அளிப்பது கடினம்

இதற்கிடையே சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது கடினமானது. மதுரையில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் என மாவட்ட ஆட்சியரிடம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் தேர்தல் நடத்த வேண்டாம் என அனைத்துக்கட்சிகளும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா நேரத்தில் தேர்தல் நடப்பதால் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

நேரத்தை அதிகப்படுத்த கோரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், காவல்துறையினர் முதலானோரிடம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் திருவிழாவையொட்டி எப்போது உள்ளூர் விடுமுறை என தேர்தல் ஆணையம் கேட்டது. ஏப்ரல் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை என சொல்லப்பட்டது. வாக்குப்பதிவு நாளான 18ம் தேதி அன்று மதுரையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் வழக்கம்போல், மதியம் 12 மணிக்கு தேரோட்ட விழா முடிந்துவிடும். எனவே, வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. தேர்தல் நாளின் போது, மாலை 6 மணிக்கு வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு, எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான நேர நீட்டிப்பு குறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தேதி மாற்றப்படுமா?

சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு பேசுகையில், வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை மாற்ற வேண்டும் என்று ஆட்சியர் பரிந்துரைத்தால் அது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மதுரையில் வாக்குப்பதிவு தேதியை மாற்றுவது குறித்து இன்றே அறிக்கை அனுப்பும்படி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் தேதியை மாற்றுவது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும் கவனத்தில் கொள்வோம். மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில்தான் டெல்லிக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் பொது (இடை) தேர்தல்!