பொள்ளாச்சி பயங்கரம் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

Read Time:2 Minute, 29 Second

பொள்ளாச்சி பயங்கரம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகளை காதல் வலைவீசி, பாலியல் சித்தரவதை செய்த கும்பல் தொடர்பான தகவல்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த கொடிய மிருகங்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் அல்லது சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் விரைவில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதற்கிடையே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது தாயார் கடந்த 6-ம் தேதி பொள்ளாச்சி முதலாவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆறுமுகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநாவுக்கரசிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கை வந்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கினால் குற்றவாளி வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.