காந்தியின் இந்தியாவா? கோட்சேவின் இந்தியாவா?… “மோடி வேண்டுமா? குழப்பம் வேண்டுமா?…” போட்டா போட்டி

Read Time:4 Minute, 3 Second

மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சே இந்தியா வேண்டுமா என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போது காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேயின் இந்தியா வேண்டுமா என தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

அதன் பிறகு குறைந்தபட்ச வருவாய் திட்டத்தையும், விவசாயிகள் பாதுகாப்பையும் காங்கிரஸ் உறுதி செய்யும். இந்தியாவை காங்கிரஸ் மாற்றியமைக்கும். டெல்லியில் சீலிங் நடவடிக்கைகளை இரு கட்சிகளும் (ஆம் ஆத்மி, பாஜக) வேடிக்கைப் பார்க்கின்றன. தில்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார்.

அருண் ஜெட்லி

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் அமைய வேண்டுமா? அல்லது குழப்பத்தை கொண்ட எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசு வேண்டுமா? என்று நாட்டு மக்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி, தன்னைத் தானே அழித்து கொள்ளும் கூட்டணியாகும். இதில் கருத்து வேறுபாடுகளை கொண்ட கட்சிகள்தான் இருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் அணியில் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. அதுவே அக்கூட்டணியில் பிரச்னையாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முழுமையான தலைவர் கிடையாது. அவரும் தலைவராக முயற்சித்து விட்டார். அவர் பரிசோதித்து பார்க்கப்பட்டு விட்டார். ஆனால் தோல்விதான் கிடைத்தது. பிரச்னைகளை சரியாக புரிந்து கொள்ளும் திறன் ராகுலிடம் இல்லை. குழப்பம் நிலவும் கூட்டணிக்கு தலைமை வகிக்க அவர் விரும்புகிறார்.

அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாருங்கள். தலைவர்கள் பிரச்னையே கிடையாது. கூட்டணியின் தலைவர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடியே தலைமை வகிக்கிறார். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், அவரே பிரதமராக மீண்டும் பதவியேற்பார். எதிர்க்கட்சி கூட்டணியில் ஏராளமான தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும், பிறரை சதியால் வெளியேற்ற முயற்சிப்பார்கள்.

தற்காலிக அரசை தருவது குறித்து மட்டுமே அவர்களால் வாக்குறுதி அளிக்க முடியும். இதனால் குழப்பம்தான் ஏற்படும். எனவே, மக்களவைத் தேர்தலானது நாட்டுக்கு மோடி வேண்டுமா? அல்லது குழப்பம் வேண்டுமா? என்பதை தீர்மானிப்பதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.