பொள்ளாச்சி ஆபாச வீடியோக்களும், சிக்கிய அரசியல் புள்ளிகளும்…!

Read Time:5 Minute, 40 Second

பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் சிக்கியவர்களுக்கும், அரசியல் கட்சிப்பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி காதல் வலைவீசி பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸ் கைது செய்தது. அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இவ்விவகாரத்தில் புதிய வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களிடம் சிக்கும் பெண்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து, இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலையை அடையுமாறு சீரழிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது இவ்விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர்களின் நண்பர்கள் வட்டத்தில், அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளும் இருந்துள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகரின் மகனின் தொடர்பு இக்கும்பலுக்குக் கிடைத்துள்ளது. கும்பலிடம் சிக்கிய கல்லூரி மாணவிகளை, அவர் காரில் வெளியூருக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருநாவுக்கரசு பிடிபட்டால், இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்ற உண்மை வெளிவந்துவிடும் என்பதற்காவே, அவரைப் பிடிப்பதில் போலீஸார் காலதாமதம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், அரசியல் பிரமுகர்கள் சிலர் திருநாவுக்கரசை தொடர்புகொண்டு, அரசியல் கட்சியினர் யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லை என்று போலீஸில் கூறுமாறும் மிரட்டியுள்ளனர். அத்துடன், தலைமறைவாக சுற்றித் திரியாமல் போலீஸாரிடம் பிடிபட்டு விடுமாறும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தாலும், ஓராண்டில் வெளியே வந்துவிடலாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன் பின்னரே, திருநாவுக்கரசு போலீஸிடம் பிடிபட்டுள்ளார். முக்கியப் பிரமுகரின் மகன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஏதேனும் திருநாவுக்கரசிடம் உள்ளதா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்” என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன என தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மறைமுகமாக மிரட்டல்

இந்த கும்பல் கடந்த 7 வருடங்களாக பெண்களை சித்தரவதை செய்துள்ளது. பணம் கொடுக்க முடியாத பெண்களை நண்பர்களுக்கு இறையாக்கியுள்ளனர். நண்பர்களிடம் இருந்து பணம் பறித்து உள்ளனர். வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்கள் வீடியோக்களை காட்டி மிரட்டியுள்ளனர். இதுவரையில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இந்நிலையில் சித்தரவதை அனுபவித்த பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது. போலீசாரிடம் மட்டுமே சிக்கிய வீடியோ எப்படி சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இது யாராவது புகார்கொடுக்க முன்வந்தால், அவர்களது வீடியோக்களும் இதுபோல வெளியாகும் என மறைமுகமாக மிரட்டுவதற்காகவே இந்த வீடியோக்கள் வெளிவந்திருக்கலாம் என்று சமூக செயல்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் மறுப்பு

இதற்கிடையில் என்னுடைய குடும்பம் இவ்விவகாரத்தில் தவறாக இழுக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தி.மு.க. செய்யும் மோசடி, எந்தஒரு விசாரணைக்கும் நானும், என்னுடைய குடும்பமும் ஒத்துழைப்பு கொடுக்கும் என அதிமுக தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மாட்டப்போவது தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகன் தான். அவருக்கும், இந்த வழக்கின் முதல் குற்றவாளிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இதில் யார்-யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை மறைக்கப்படுகிறது

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இவ்விவகாரத்தில் ஏதோ ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. இந்தக் குளறுபடிகளுக்கு மத்தியில் இதில் அரசியல் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பொள்ளாச்சியில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.