பொள்ளாச்சி பயங்கரம்: தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிக்கின்றன – உயர்நீதிமன்றம்

Read Time:2 Minute, 6 Second

டெல்லியில் நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முக்கிய பிரச்சனைகள் எழும்போது தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. சென்னை வெள்ளத்தில் எழுந்த இந்த குற்றச்சாட்டு அதன்பின்னரும் பல்வேறு சம்பவங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி தொடர்பான செய்திகள் தேசிய ஊடகங்களில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது, வெளியாகியுள்ள இந்தக் கொடூர சம்பவம் பலரையும் உறையவைத்துள்ளது. இச்சம்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை, நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை; தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிக்கின்றன என வேதனை தெரிவித்துள்ளது. கஜா புயல் பாதிப்பு நிவாரணம் தொடர்பான வழக்கை விசாரிக்கையில் நீதிமன்றம் இக்கருத்தினை தெரிவித்துள்ளது. தேசிய ஊடகங்கள் நகர்ப்புறங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஊரகப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை என குறிப்பிட்டுள்ளது.