மாசி செவ்வாய், கிருத்திகை, சஷ்டி மூன்றும் இணைந்தநாளில் முருகன் தரிசனம்…!

Read Time:7 Minute, 54 Second

மாசி செவ்வாய், சஷ்டி, கார்த்திகை என மூன்றும் இணைந்த இந்த நன்னாளில், முருகப்பனை தரிசனம் செய்து அருள் பெறுவோம்.

அன்புக்கும் அருளுக்கும் பஞ்சம்வைக்காத முருகப் பெருமானுக்கு முன்று விரதங்கள் மிகவும் உகந்தவையாகும். அவை, வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் ஆகும். வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளிலும், நட்சத்திர விரதம் கார்த்திகை நட்சத்திரத்திலும், திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது.

செவ்வாய்

செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்தது, சக்தியானது. கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் இவ்விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

செவ்வாய்க்கிழமை காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்கு சென்று வழிபடவேண்டும்.
பின்னர் வீடு திரும்பியதும் பால், பழச்சாறு மட்டும் அருந்தி முருகனின் திருநாமங்களை கூறி விரதம் இருக்கலாம். மாலையில் மீண்டும் கோவிலுக்கு சென்று முருகனை வழிப்பட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

கார்த்திகை

கந்தனை வளர்க்க சிவபெருமான் கார்த்திகை பெண்களான அறுவரை நியமித்தார். கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

சிவனின் வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

தண்ணீர் மட்டும் அருந்தி முருகப்பெருமானின் மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். தேவரிஷிகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் நாரத மகரிஷி, விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மைச் சிறப்பைப் பெற்றார். மாலையில் வீட்டில் முருகனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம். கோவிலுக்கு செல்லலாம்.

சஷ்டி

வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். சஷ்டியில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெற வாழ்வில் அனைத்துச் செல்வ வளமும் வளர்ந்து கொண்டே போகும். சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது.

சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது நிச்சயம். மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, விரதத்தை நிறைவு செய்யலாம்.

தொடர்ந்து ஆறு சஷ்டிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாதம்தோறும் வரும் சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்கள்கூட ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்தால், முருகப் பெருமானின் அருளால் வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அடையலாம். முருகப் பெருமானுக்கு உரிய இந்த மூன்று விரதங்களை நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.

மூன்றும் ஒரே நாளில்

இன்று மாசி மாத கடைசி செவ்வாய், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் என மூன்றும் இணைந்து வருகிறது.

இந்த நாளில் மறக்காமல் முருகப்பெருமானை தரிசித்து பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும்! இந்த நல்ல நாளில் முருகப் பெருமானை நினைத்து, காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுங்கள். முருகனுக்கு செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டி முருகப்பெருமானை அலங்கரியுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கோ, சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சந்நிதிக்கோ சென்று தரிசியுங்கள். குறிப்பாக செவ்வாய் தோஷக்காரர்கள் மறக்காமல், முருக தரிசனம் செய்வது அவர்களை தோஷ நிலையில் இருந்து விடுவிக்கும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இந்நாளில் தானம் செய்தால் அளவற்ற நன்மைகளை அடைவார்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். சிவன், அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள்…