பதபதைக்க வைக்கும் பொள்ளாச்சி பயங்கரம்… அரசியல் பின்னணி குறித்து விசாரிக்க வலுக்கும் கோரிக்கை

Read Time:7 Minute, 58 Second

பதபதைக்க வைக்கும் பொள்ளாச்சி பயங்கரம்… அரசியல் பின்னணி குறித்து விசாரிக்க வலுக்கும் கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை குறிவைத்து காதல் என்ற வலையைவீசி பாலியல் பலாத்காரம் செய்து; வீடியோ எடுத்து; பணம் பறிக்கும் கும்பல் செயல்பட்டு இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிப்ரவரி 12-ம் தேதி இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட அப்பகுதி மாணவி காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. விசாரணையை மேற்கொண்ட போலீஸ் 25-ந் தேதி சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் முக்கிய குற்றவாளியான திருநாவுக் கரசுவை கடந்த 5-ந் தேதி கைது செய்தது.

முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு போலீஸிடம் சிக்குவதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ வாக்குமூலத்தில், ‘இந்த விவகாரத்தில் பலருக்கும் தொடர்பு இருக்கிறது. அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்’ என்று சொல்கிறான். இந்த கும்பல் அழகான பணக்காரப் பெண்கள், மாணவிகளை குறிவைத்து சித்தரவதை செய்து 200க்கும் அதிகமான வீடியோக்களை எடுத்து உள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்ததற்காக அவருடை அண்ணனை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இவ்விவகாரத்தில் போலீஸ் செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (20), நாகராஜ் (26) ஆகிய நான்கு பேரைக் கைது செய்தது. இந்த தாக்குதல் புகாரில் கைதான நான்கு பேருமே மூன்று நாள்களில் பிணையில் வெளிவந்துவிட்டனர். இப்படியிருக்கையில் எப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க வருவார்கள்? என்ற கேள்விதான் எழுகிறது. இதில் நாகராஜ் பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர். அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என திமுக போராட்டம் நடத்தி வருகிறது. காவல்துறையின் நடவடிக்கையின் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகிறது. பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் 24-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறுகிறார். சம்பவம் நடைபெற்றது 12-ம் தேதியாகும். பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால் கோவை எஸ்.பி. வெளியிட்ட செய்தியறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவர் இருக்கும் இடம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இதுபோன்று தகவல்களை வெளிப்படையாக அறிவிப்பதும் பாதிக்கப்பட்ட பெண்களை பாதிக்கிறது. பெண்கள் யாரும் வழக்கு தொடுக்க முன்வரவில்லை. இதனால் வழுவான வழக்கு இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை. குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. ஆளும் கட்சியில் முக்கியப் புள்ளியாக இருக்கும் நபரில் இளைய மகன், வால்பாறையில் இதேபோன்று ஒரு பெண்ணை அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தபோது, அந்தப் பெண் சத்தம்போட்டதில் மக்கள் கூடிவிட்டனர். அவன் தப்பிவிட்டான். இதனால்தான் எதிர்க்கட்சி சிபிசிஐடி விசாரணையை கோருகிறது.

இந்த வழக்கினால் பெரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசு அச்சம் கொள்வதாக அரசுதரப்பு உயர்மட்ட தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன என்பது தான். இந்த அரக்கர்களை தப்பவிடாமல் அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது. சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது காவல்துறையின் கடமையாகும். இதில் காவல்துறையின் கைகளைக் கட்டிப்போடாமல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிப்பதிலேயே தமிழக அரசின் மாண்பு அடங்கியிருக்கிறது…!

பொள்ளாச்சி ஜெயராமன் மறுப்பு

இதற்கிடையில் என்னுடைய குடும்பம் இவ்விவகாரத்தில் தவறாக இழுக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தி.மு.க. செய்யும் மோசடி, எந்தஒரு விசாரணைக்கும் நானும், என்னுடைய குடும்பமும் ஒத்துழைப்பு கொடுக்கும் என அதிமுக தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மாட்டப்போவது தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகன் தான். அவருக்கும், இந்த வழக்கின் முதல் குற்றவாளிக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இதில் யார்-யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குண்டர் சட்டம்

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் வேறு நபர்களுக்கோ, அரசியல் கட்சியினருக்கோ தொடர்பு இல்லை. இது சம்பந்தமாக தவறான தகவல் பரப்பு பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியுள்ளார். குண்டர் சட்டம் பலனளிக்காது; இது கண்துடைப்பு; இதிலிருந்து தப்பிவிடுவார்கள். கடுமையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.