என்னை ‘பெயர் சொல்லியே கூப்பிடுங்க..!’ மாணவிகளுக்கு ராகுல் காந்தி ரிக்வஸ்ட்…!

Read Time:3 Minute, 7 Second

சென்னைவந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்று, மாணவிகளுடன் உரையாற்றினார்.

மாணவிகளிடம் உரையாற்றிய ராகுல் காந்தி, என்னிடம் கடினமான கேள்விகளை கேளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அப்போது மாணவி ஒருவர் ‘ஹாய் சார்…’ என்று சொல்லி கேள்வியை ஆரம்பித்தார். உடனே அவரை இடைமறித்த ராகுல், ‘என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க’ என்றார். உடனே அந்த மாணவியும், ‘ஹாய் ராகுல்’ என்றார். அதற்கு அங்கிருந்த மொத்த மாணவியர் கூட்டமும் கரகோஷம் ஏழுப்பியது. மாணவியின் ஒவ்வொரு வார்த்தைக்கு இடையேயும் மாணவிகள் கரகோஷம் எழுப்பினர். ராகுல் காந்தியின் இந்த வீடியோ பாராட்டுக்களுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் விவகாரம், கல்வித்துறை, பெண்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்து பேசினார்.

ராகுல் காந்தியிடம் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா குறித்து பேச மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “வதேரா மீது இருக்கும் குற்றச்சாட்டை இந்த நாட்டின் விசாரணை அமைப்புகள் புலன் விசாரணை செய்ய வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நான்தான் அவர் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லும் முதல் நபர். அதே போல, ரபேல் ஒப்பந்தம் குறித்து நரேந்திர மோடி மீதும் விசாரணை செய்யப்பட வேண்டும். விசாரணை என்பது குறிப்பிட்ட நபர் மீது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்,” பதிலளித்தார்.

கல்வி நிலையங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென்னிந்தியா சிறந்து விளங்குகிறது. தென்னிந்தியாவில் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது. பெண்கள் இரண்டாம் நிலை அல்ல, அவர்களை சம நிலையாக கருத வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசின் வேலை வாய்ப்பில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என குறிப்பிட்டார். ராகுல் காந்தி பேச்சு உத்வேகம் அளித்தது என கல்லூரி மாணவிகள் உற்சாகமாக கூறியுள்ளனர். மிகவும் அமைதியாக எங்களுடைய கேள்விகளுக்கு பதில் உரைத்தார். எதிர்காலத்திற்கான தலைவராக அவர் இருக்கிறார் எனவும் மாணவிகள் கூறியுள்ளனர்.