“சித்திரை திருவிழாவுக்காக தேர்தலை ஒத்திவைக்க இயலுமா?” தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Read Time:4 Minute, 31 Second

“சித்திரை திருவிழாவுக்காக தேர்தலை ஒத்திவைக்க இயலுமா?” என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 -ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம் உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சியும் மறுநாள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும். பாதுகாப்பு பணியிலும் சிரமம் ஏற்படும். எனவே, மதுரையில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சித்திரை திருவிழாவில் தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வின்போது தேர்தலை நடத்துவது எப்படி சாத்தியம்? என நீதிமன்றம் கேள்வியை எழுப்பியது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர், காவல்துறை ஆணையர் தரப்பில் தேர்தலை நடத்துவது சாத்தியம் எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது தமிழகத்தின் முக்கியமான விழா என்பது குறித்து காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஏன் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு இருக்கும் போது 5 லட்சம் பேர் திருவிழாவுக்கு வந்தால் 100 சதவீத வாக்குப்பதிவு எவ்வாறு சாத்தியமாகும்?

மதுரை மட்டுமன்றி திருவண்ணாமலை, தேனியிலும் இதுபோன்ற நிலைமையே உள்ளது. எனவே தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு தேதியை தள்ளிவைப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இரண்டு தினங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாளை பதில்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் பேசுகையில், சித்திரை திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. மதுரை கலெக்டர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி இதுபற்றி விவாதித்துள்ளார். அவர்கள் அளித்த கருத்துக்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளார். உயர்நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும்போது தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். அங்குள்ள நிலைமை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளோம். காவல்துறை சார்பிலும் கோர்ட்டில் அறிக்கை அளிக்கப்படும். கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். புனித வெள்ளி, ரம்ஜான் மாதம் ஆகிய நிகழ்வுகளை குறிப்பிட்டு தேர்தலை மாற்றுத்தேதியில் நடத்த வேண்டும் என்றும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.