‘உச்சநீதிமன்ற நீதிபதிகளே நீதி கேட்கிறார்கள்…’ ராகுல் – பிரியங்கா பேச்சின் 10 முக்கிய அம்சங்கள்

Read Time:5 Minute, 16 Second

இன்றைய இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளே நீதி கேட்கும் நிலைதான் உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடியின் சொந்த மண்ணான குஜராத்தில் 1961–ம் ஆண்டுக்கு பிறகு காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. காங்கிரஸ் கூட்டத்தில், தொடர்ந்து பேசிவரும் பொய்களையும், மாபெரும் தோல்விகளையும் மறைப்பதற்காகவும், திசைதிருப்பவும் மோடி, தேசப்பாதுகாப்பை தனக்கு ஏற்றார்போல் பயன்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

புல்வாமா தாக்குதல் காரணமாக இந்த செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தேசத்தை துண்டாட பிரதமர் மோடி முயல்கிறார். தேர்தல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகளின் தேசபக்தியையும், கடமையையும் பிரதமர் மோடி கேள்வி கேட்கிறார். ஆர்எஸ்எஸ், பாஜகவின் பாசிசம், வெறுப்பு, கோபம், பிரித்தாளுதல் ஆகியவை தோற்கடிக்கப்படும். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உ.பி. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தியும் கலந்துக்கொண்டு பேசினார். ராகுல் காந்தி, சோனியா காந்தி பேச்சின் 10 முக்கிய குறிப்புகள்:-


பிரியங்கா பேசுகையில், நீங்கள்தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்யப் போகிறீர்கள். மக்கள் தேவையில்லாத பிரச்சினைகளால் கவனத்தை திசை திருப்ப வேண்டாம். உங்களுடைய வாக்குதால் ஆயுதம், உங்களால்தான் இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்.


இன்று தேசத்தில் நடக்கும் சம்பவங்கள் என்னை மிகவும் கவலையடைய செய்கிறது. நம்முடைய அரசியல் சட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் அழிக்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.


இந்த தேசத்தை பாதுகாப்பதைவிட நமக்கு பெரிய பணி எதுவும் கிடையாது. இதற்கான பணியை ஒன்றாக செய்வோம்.


வாக்காளர்களை திசை திருப்ப முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் மக்கள் சரியான கேள்விகளை கேட்க வேண்டும். முடிவெடுப்பதற்கு முன் நன்றாக யோசித்துப் பாருங்கள்.


கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக பிரதமர் மோடி வாக்குறுதியை கொடுத்தார். ஆனால் அதனை காப்பாற்றவில்லை. 2 கோடி வேலை வாய்ப்பை எங்கே? பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே? ரூ. 15 லட்சம் எங்கே? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.


ராகுல் காந்தி பேசுகையில், “இன்றைய இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மக்களுக்கு முன்னால் நீதியை நாடுகின்றனர்… இது உச்ச நீதிமன்றத்தில் மட்டும் நடக்கவில்லை… அரசு நிறுவனங்கள் எல்லா இடங்களிலும் இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.”


வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பத்திரிகையாளர்களிடம் சென்று, எங்களை வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். பின்னர் நீதிபதி பிரிஜ்மோகன் லோயா விவகாரத்தை எடுக்கிறார்கள்.


[பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது]


மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளை பற்றி பேசுவது கிடையாது. “நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையான வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் உயர்ந்த நிலையில் உள்ளது, ஆனால் அரசாங்கம் இதைப் பற்றி பேசவில்லை.”


குஜராத்தில் இரண்டு சித்தாந்தங்களும் காணப்படுகின்றன. ஒருபுறம், மகாத்மா காந்தியின் சித்தாந்தம் இந்த நாட்டை கட்டியமைத்திருக்கிறது… இன்று, மற்ற சக்திகள் இந்த நாட்டை பலவீனப்படுத்த முயல்கின்றன என குற்றம் சாட்டினார்.