வானில் பறக்க தொடங்கியதும் விபத்து… போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களுக்கு இந்தியா தடை விதிப்பு

Read Time:3 Minute, 45 Second

போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ்-8 விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கி பயணிகள், பணியாளர்கள் என 189 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து சம்பவங்களால் ‘போயிங் 737 மேக்ஸ்-8′ ரக விமானங்கள் மீதான பாதுகாப்பு அச்சம் எழுந்தது.

எனவே, ‘போயிங் 737 மேக்ஸ்-8′ ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கும்படி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உத்தரவிட்டது. அதன்படி விமானங்கள் தரையிறக்கப்பட்டன. எத்தியோப்பியாவை தொடர்ந்து சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகள் ‘போயிங் 737 மேக்ஸ் 8′ ரக விமானங்களை இயக்க அந்நாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு தடை விதித்தது. போயிங் 737 8 ரக விமானங்களை தடை விதிக்கும் நாடுகள் பட்டியல் ஆஸ்திரேலியா, தென்கொரியா, மங்கோலியா, ஜெர்மனி, பிரிட்டன் என நீண்டுக் கொண்டே சென்றது. இதுபோன்று ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் முன்னெச்சரிக்கையாக இவ்வகை விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளது. சில நாடுகளில் விமானிகளும் இயக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் முதலில் ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானத்தை இயக்கும் விமானிக்கு குறைந்தது ‘1,000 மணி நேரம்’ அனுபவம் வேண்டும், துணை விமானிக்கு ‘500 மணி நேரம்’ அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறையை அமல்படுத்தியது. இந்தியாவில், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ‘போயிங் 737 மேக்ஸ் 8′ ரக விமானத்தை பயன்படுத்தி வருகின்றன. ஆணையத்தின் விதிகளுக்கு உடன்படுவோம் என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கொண்டுள்ளதாகவும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 5 விமானங்களை கொண்டுள்ளதாகவும் எதுவும் தற்போது இயக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போயிங் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேக்ஸ் 737 விமானத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் முழு அளவில் பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க விமான நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.