2019 தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட மாட்டார்…

Read Time:3 Minute, 2 Second

2019 தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட மாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

86 வயதாகும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் ஜூன் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையே 2019 தேர்தலில் அவர் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து போட்டியிட வைக்கலாம் என்று காங்கிரஸ் தரப்பில் முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் அவருக்கு விருப்பம் ஏதும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மன்மோகன் சிங்கை சந்தித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நலம் விசாரித்தார். பஞ்சாபில் போட்டியிடுவது குறித்து மன்மோகனிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதில் தனக்கு விருப்பம் இல்லை என்று மன்மோகன் அமரிந்தரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமரிந்தர் சிங், மன்மோகன் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுவரை மன்மோகன் மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமே இருந்து வருகிறார்.

பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் மே 19-ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. முடிவுகள் 23-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்?

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களில் 6 பேரது பதவிக்காலம் ஜூலையுடன் முடிகிறது.

சட்டமன்றத்தில் இப்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி இரு எம்.பி.க்களை திமுக மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும். 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவின் போது இந்நிலை மூன்றாக உயரவும் வாய்ப்பு உள்ளது. இதுவரையில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கனிமொழி போட்டியிலிருந்து விலகிவிட்டார். திமுக கூட்டணியில் இப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றுதான் காங்கிரசுடன் கூட்டணி உருவாகியுள்ளது என தெரிகிறது. காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படலாம் என யூகங்கள் எழுக்கிறது.