பிரதமர் மோடியை கட்டியணைத்தது ஏன்? சென்னை கல்லூரி மாணவியின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில்

Read Time:3 Minute, 44 Second

பிரதமர் மோடியை கட்டியணைத்தது ஏன்? என்ற சென்னை கல்லூரி மாணவியின் கேள்விக்கு ராகுல் காந்தி சுவாரஸ்யமாக பதில் அளித்தார். என்னுடைய அன்பின் மூலமாக அவருடைய ஆத்திரத்தை குறைக்க முயற்சி செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டியணைத்தது பா.ஜனதாவால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக சென்னை கல்லூரி மாணவி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமே கேள்வியை எழுப்பிவிட்டார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார். மாணவி ஒருவர் எதற்காக பிரதமர் மோடியைக் கட்டியணைத்தீர்கள்? என்று கேள்வியை எழுப்பினார். ஒருநிமிடம் யோசிக்கும் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் மீது எனக்கு அன்புதான் உள்ளது என பதில் அளித்தார்.

ராகுல் காந்தி விரிவாக பேசுகையில், “அனைத்து மதங்களுக்கும் அன்பே அடிநாதம். இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம், புத்தம், சமணம் அனைத்துக்கும் இது பொருந்தும். நான் நாடாளுமன்ற அவையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு அவரின் மீது எந்தக் கோபமும் இல்லை. அவரின் மீது எவ்விதமான வெறுப்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் மிகுந்த கோபத்துடன் இருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது. நானோ, காங்கிரஸ் கட்சியோ எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறிக்கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு இழிவானவர்கள், என்னுடைய தந்தை மோசமான நபர், என்னுடைய தாய் பயங்கரமானவர், என் பாட்டி என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. ஆனால் எனக்குள் மோடி மீது அன்பு இருந்தது.

கோபத்தில் இருந்த அந்த மனிதரால் உலகின் அழகை உணர முடியவில்லை. குறைந்தபட்சம் என்னுடைய பங்காக அவர் மீது அன்பை வெளிப்படுத்த முடிவுசெய்தேன். கட்டியணைத்தேன். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தாத நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணம் அவர்கள் மீது யாரும் அன்பு செலுத்தி இருக்க மாட்டார்கள். அதனால் அன்பு மூலமாக ஆத்திரத்தைக் குறைக்க முடிவெடுத்து, செயல்படுத்தினேன். உங்களுக்குப் பாடம் கற்றுத் தருபவர்களை உங்களால் வெறுக்க முடியுமா என்ன? ” என்ற கேள்வியை எழுப்பினார்.

காங்கிரஸ் 2014-ம் ஆண்டு படுதோல்வியை தழுவியது எனக்கு அதிகமான பாடங்களை கற்றுக்கொள்ள துணையாக இருந்தது. எனக்கு பாடம் கற்றுக்கொடுத்தவர் மோடிதான். என்னை எப்போது எல்லாம் தாக்கி பேசுகிறாரோ, என் மீது எப்போது கோபத்தை வீசுகிறாரோ, அப்போது எல்லாம் கோபத்தை பதிலாக கொடுக்க கூடாது என பயிற்சியை கொடுத்தார். அவரை என்னால் வெறுக்க முடியாது என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.