பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை கண்டுக்கொள்ளாத போலீஸ்…!

Read Time:4 Minute, 45 Second

பொள்ளாச்சியில் பாலியல் பயங்கரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருடைய புகாரை போலீஸ் கண்டுக்கொள்ளாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் இருக்கிறது. இது பாதிக்கப்பட்டு முதலில் புகார் தெரிவித்த மாணவி சம்பவத்திலே உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை காவல்துறை எஸ்.பி.யும் வெளியிட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. 7 ஆண்டுகள் நடந்த இச்சம்பவத்தில் ஒருவர் கூட புகார் தெரிவிக்கவில்லையா? போலீஸ் புகாரை வாங்கவில்லையா? இல்லை கண்டுக்கொள்ளவில்லையா? என்ற கேள்விகள் எழுகிறது.

இவ்விவகாரம் பூதகரமாகி கண்டனங்கள் எழுந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் புகாரை போலீஸ் கண்டுக்கொள்ளாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசியுள்ளார். அவர் தனக்கு நேர்ந்த கொடுமையையும், போலீஸ் நடவடிக்கை எடுக்காததையும் விளக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் பேசுகையில், 3 வருடங்களாக நாங்கள் காதலித்தோம். ஆசை வார்த்தை காட்டி என்னை கூட்டிச் சென்று பலவந்தப்படுத்தி, ஆபாச புகைப்படங்கள் எடுத்தான். என்னை மிரட்டி என்னிடம் இருந்து காசு, பாணம் நிறைய வாங்க ஆரம்பித்தான்.

அதன்பின்னர் அவனுக்கு தேவையான பைக், போன் முதலியவற்றையும், வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுக்கச் சொல்லி என்னை மிரட்டினார். இல்லையென்றால் புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டினான். உன் தந்தைக்கு அனுப்புவேன், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் எல்லாம் பரப்பி மானத்தை வாங்குவேன் என மிரட்டினான். என்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்கள், நான் அவனை லவ் பண்ணுகிறேன் என தெரிந்ததும் என்னை அழைத்து பேச ஆரம்பித்தார்கள்.

நானும் உங்களைப் போன்று ஏமாந்துவிட்டேன், வாருங்கள் அனைவரும் இணைந்து அவன்மீது புகார் கொடுக்கலாம் என அழைத்தேன். ஆனால் அவர்கள் வர மறுத்துவிட்டனர். அப்படி வந்தால் தங்கள் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் என்றார்கள். இந்த பிரச்னையில் இருந்து எனக்கு ஒரு முடிவு வேண்டும், இனிமேல் என்னைப்போன்று யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நான் புகார் அளித்தேன். காவல்துறை இதற்குரிய நடவடிக்கை எடுத்து அவனுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். நேற்று மாலை புகார் அளித்தேன், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்னிடம் எதுவுமே அதைப்பற்றி போலீஸ் பேசவில்லை. காத்திருக்கங்கள் என்று தான் கூறினார்கள். அழைத்துப் பேசவேயில்லை. என்னிடமே சுமார் 15 பெண்கள் பேசியுள்ளனர். நான் விசாரித்து பார்த்த வரைக்கும், அவர் வேலை செய்யும் கம்பெனியில் சுமார் 100 பெண்கள் இருக்கின்றனர். இவன் அரிசிக்கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்து வருகிறான். இதை அவனே என்னிடம் சொல்லியிருக்கிறான். அவனை விசாரித்தால் நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண்ணை ஏமாற்றியவன், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன் அல்ல. ஆனால் அதேபோன்று ஒருவன் தான். எனவே இந்தக் கும்பலுக்கும், அவனுக்கும் தொடர்பிருக்கலாம் எனப்படுகிறது. அல்லது, இந்தக் கும்பலைப் போன்று இன்னும் சில கும்பல் பொள்ளாச்சியில் இருக்கலாம் என கூறப்படுகிறது. விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.