திருநாவுக்கரசுவுக்கு ஏராளமான மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி கொடுத்த பெண் தோழி…

Read Time:2 Minute, 49 Second

பொள்ளாச்சி பயங்கரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவுக்கு ஏராளமான மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி கொடுத்த பெண் தோழி தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு (வயது 27). எம்.பி.ஏ. பட்டதாரியான இவன் வசதியான குடும்பம், சொகுசு கார், பண்ணை தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளான். இவன் கல்லூரியில் படிக்கும்போதே இப்படி பெண்களை வலையில் விழசெய்து ஏமாற்றுபவனாக வலம் வந்துள்ளான். சுமார் 7 ஆண்டுகளாக இவனுடைய கும்பல் பல பெண்களை சீரழித்து உள்ளது. இவ்விவகாரத்தில் முக்கிய சம்பவமாக பெண்களை சீரழிக்க பெண்களே உடந்தையாக இருந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தோழி மூலம் சில இளம்பெண்களிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்களிடம் இனிமையாக பேசி, மயக்கி காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். மேலும் பல இளம்பெண்களின் செல்போன் எண்ணை பெற அவன் தேர்வு செய்தது பேஸ்புக் மூலமாகதான். மாணவிகளை நம்ப வைத்து, நண்பர்களுடன் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சித்தரவதை செய்துள்ளான். இதேபோன்று அவனது நண்பனான சபரிராஜனும் பெண்களை வலையில் விழச்செய்துள்ளான்.

முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசுவுக்கு ஏராளமான மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி கொடுத்தது பெண் தோழி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருநாவுக்கரசு இந்த செயலில் ஈடுபட அவருடன் படித்த தோழி ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார். அந்த பெண் மூலம்தான் அவர் ஏராளமான இளம்பெண்களின் செல்போன் எண்களை பெற்று உள்ளார். எனவே அந்த பெண் யார் என்பது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்து உள்ளது. அதை வைத்து நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.