நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியில்லை…

Read Time:2 Minute, 2 Second

நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்தது. காங்கிரஸை கழற்றிவிட்டது. இதனையடுத்து தனியாக போட்டியென அறிவித்த காங்கிரஸ் பிரியங்கா காந்தியையும் அரசியலுக்கு கொண்டுவந்தது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை காரணமாக இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை. அவருடைய தொகுதியில் பிரியங்கா போட்டியிடலாம் என தகவல் வெளியானது.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் காங்கிரஸ் கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் சோனியா காந்தி போட்டி உறுதி செய்யப்பட்டது. சோனியா காந்தி ரேபரேலியிலும், ராகுல் காந்தி அமேதியிலும் போட்டியிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்காவின் பெயர் முதல்கட்ட வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும் பின்னர் அவருடைய பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும் என பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தவே பிரியங்கா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். எனவே, தேர்தலில் போட்டியிட மாட்டார் என கட்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.