தமிழகத்தில் ‘மினி சட்டமன்றத் தேர்தல்’… அதிமுக 2021 வரை ஆட்சி செய்ய முடியுமா?

Read Time:5 Minute, 44 Second

தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 18-ம் தேதி (வியாழக் கிழமை) ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் உள்ள பா.ஜனதாவிற்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமானது. தமிழகத்தில் முக்கியமான கூட்டணியை அமைத்து வெற்றி பெறுவதில் முக்கியத்துவம் காட்டுகிறது.

ஆனால் இங்கிருக்கும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல்தான் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 2014 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வேட்பாளர்கள் 37 இடங்களில் வென்றனர். அதிமுக நாடாளுமன்றத்தில் பா.ஜனதாவிற்கு ஆதரவு அளித்தது அல்லது வாக்களிப்பதில் இருந்து விலகியது. அதிமுகவின் ஆதரவு மோடி அரசாங்கத்திற்கு விலைமதிப்புமிக்கதாக நிரூபிக்கப்பட்டது. இப்போது அதிமுக நிறைய தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டியது உள்ளது.

அதிமுகவிற்கு தேவையென்ன?

234 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் அதிமுகவின் பலம் 114-ல் இருந்து 108 ஆக குறைந்துவிட்டது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மூன்று சுயேட்சை எம்.எல்.ஏக்கள், அதிமுகவில் இருந்து வெற்றிப்பெற்ற 3 எம்.எல்.ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிமுகவிற்கான பலம் இப்போது 108 ஆகவே இருக்கிறது. தினகரன் தனி நபர் என்பதால் அவரின் ஆதரவும் அதிமுகவிற்கு இருக்க வாய்ப்புகள் கிடையாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சில வழக்குகளில் காரணமாக 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுமா? என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இப்போது தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிமுகவிற்கு 116 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சமாக 8 தொகுதிகளில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அதிமுகவால் இந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும். இப்போது காங்கிரஸ் மற்றும் திமுகவின் பலம் 97 எம்.எல்.ஏ.க்களாக உள்ளது. திமுகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் என்றால் 21 தொகுதிகளிலும் வெற்றிப்பெற வேண்டும். எனவே அதிமுகவிற்கு இலக்கு சற்று குறைவுதான்.

கருணாநிதி – ஜெயலலிதா இல்லாத தேர்தல்

தமிழகத்தில் கருணாநிதி – ஜெயலலிதா என இருபெரும் அரசியல் சக்திகள் இல்லாமல் நடக்கும் மிகப்பெரிய தேர்தல் இதுவாகும். 21 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுகவிற்கு துரதிஷ்டவசமாக, 18 தொகுதிகளில்தான் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. கட்சிக்கு வலுவான தொண்டர்கள் பலம் இருப்பதாக கூறினாலும், எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதாவைப் போன்று எல்லோரையும் கவரும் வாக்கை கொண்டிருக்கவில்லை. எனவே பெரும் தலைமையில்லாமல், கூட்டு தலைமையில் இயங்கும் அதிமுகவிற்கு மிகப்பெரிய சோதனையாகும்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

இதேபோன்று திமுகவிற்கு தலைமையேற்று இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் பெரிய பரிசோதனையாகதான் இருக்கிறது.

பிரதமர் மோடியின் கீழ் அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுடன், 18 தொகுதி இடைத்தேர்தலையும் எதிர்க்கொள்கிறது. மு.க. ஸ்டாலின் இன்னும் மாநிலத்தில் ஊழல் என்ற குற்றச்சாட்டுடன் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறார். அதிமுக கூட்டணி தேசிய பிரச்சினைகள், இந்திய விமானப்படை தாக்குதலில் கவனம் செலுத்தும் மற்றும் ஜெயலலிதா (அம்மா) அரசாங்கங்கம் என்று தொடர வேண்டிய அவசியம் குறித்து கவனம் செலுத்தும். அதே வேளையில், தி.மு.க., பிரதமர் மோடி, சிறுபான்மையினரின் பாதுகாப்பு, அதிமுக ஆட்சியில் ‘ஊழல்’ ஆகியவற்றை முன்வைத்து தேர்தலை எதிர்க்கொள்கிறது. மே மாதம் 23-ம் தேதி வெளியாகப்போகும் முடிவு மத்தியில் யார் ஆட்சியமைக்க போகிறார் என்பதை மட்டும் முடிவு செய்யப்போவதில்லை, மாநிலத்தில் யார் ஆட்சியமைக்க போகிறார் என்பதையும் முடிவு செய்கிறது.