சித்திரை திருவிழாவில் தேர்தல்; கடமைக்காக தேர்தல் நடத்தாதீர்கள் – உயர்நீதிமன்றம் காட்டம்

Read Time:2 Minute, 51 Second

மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

மதுரையில் சித்திரை திருவிழாவின் போது ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கு மக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மதுரை தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக 14-ந் தேதி இந்திய தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையம் பதிலளிக்கையில், மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் மாலை 2 மணி நேரங்கள் வாக்குப்பதிவை நீட்டிக்கலாம். மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்தால் பிற இடங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் என்றது.

கோவிலை சுற்றிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் 200 அடிக்குள் யாருக்கும் அனுமதி கிடையாது. விழா நேரத்தில் இது பெரும் இடையூறாக அமையும் என பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் பதிலில் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கடமைக்காக தேர்தலை நடத்தக்கூடாது. வாக்காளர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். கடமைக்காக மட்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைத்தால் அதனை செய்யுங்கள். பல லட்சம் மக்கள் பங்கேற்கும் சித்திரை விழாவுடன் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. களநிலவரம் அறியாமல் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறீர்கள். விழாவை கருத்தில் கொள்ளாமல் காலை 6 மணி முதல் தேர்தலை நடத்த திட்டமிட்டது எப்படி? எனவும் கேள்வியை எழுப்பியது. இவ்விவகாரத்தில் தமிழக தேர்தல் அதிகாரி பதில் அறிக்கையை நாளை தாக்கல் செய்யவில்லை என்றால் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.