பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அரசு..!

Read Time:2 Minute, 58 Second

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை அரசே வெளியிட்டது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் அரசு நிர்வாகம் தரப்பிலே அது மீறப்படும் வகையில் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை வெளியுலகிற்கு கொண்டுவந்த மாணவியின் அடையாளத்தை கோவை எஸ்.பி. வெளியிட்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது. இது பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரை தெரிவிக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே சம்பவம் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தெரிவிக்க கூடாது என மிரட்டும் வகையில் இவை வெளியிடப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு மீறிவிட்டது! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளை காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம் என குறிப்பிட்டுள்ளார்.