மீண்டும் சீனாவின் நடவடிக்கையால் 9 மாதங்களுக்கு மசூத் அசார் மீது தடைவிதிக்க வாய்ப்பு கிடையாது…!

Read Time:2 Minute, 57 Second

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மீண்டும் சீனா தடையை ஏற்படுத்தியது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. தீர்மானத்தை முன்னெடுப்பது தொடர்பாக 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் இன்று அதிகாலை 12:30 மணிக்கு முடிய இருந்தது. கடைசி நேரத்தில் சீனா எப்போதும் போல எதிர்ப்பை தெரிவித்து தடையை ஏற்படுத்தியது.

சீனா தடையை ஏற்படுத்தாமல் இருந்து இருந்தால் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, அனைத்து நாடுகளிலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்து இருப்பான்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து விதிமுறைகளும் மசூத் அசாருக்கு தடை விதிக்க பொருந்தும் என அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது. இருப்பினும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை ஆய்வு செய்ய இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம், கால அவகாசம் அளித்தல் போதுமானது என்று சீனா ஐ.நா.வில் கோரியது. இதனால், கடைசி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது தடைசெய்யப்பட்டது.

சீனாவிற்கு இப்போது குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை முதல் கட்டமாக அவகாசம் அளிக்கப்படும், பின்னர் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். எனவே 9 மாதங்களுக்கு மசூத் அசார் மீது தடைவிதிக்க வாய்ப்பு கிடையாது. இதேபோன்றுதான் முந்தைய காலங்களிலும் தடையை சீனா ஏற்படுத்தியது.

“மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஆதரவு அளித்த அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கிறோம்.” இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை நீதியின் முன்நிறுத்த தொடர்ந்து அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வோம் என இந்தியா தெரிவித்துள்ளது. இதற்கிடையே சீனாவின் தடையை முறியடித்து பாதுகாப்பு கவுன்சில் நாடுகள் நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.