பொள்ளாச்சி வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு; வழக்குப்பற்றிய 10 தகவல்கள்:-

Read Time:4 Minute, 12 Second

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார பயங்கர சம்பவம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. டெல்லியில் நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரப்படவில்லை, தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிக்கின்றன என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இவ்வழக்கில் அரசியல் தொடர்பில்லை என குற்றம் சாட்டப்பட்டாலும் அதனை மறுக்கும் விதமாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வழக்கின் விசாரணை இப்போது சிபிஐயிடம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்குப்பற்றிய 10 தகவல்கள்:-


பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக பிப்ரவரி 24-ம் தேதி புகார் அளித்தார்.


பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில் குற்றவாளிகள் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


போலீசில் புகார் அளித்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பொள்ளாச்சி நகர 34-வது வார்டு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் பார் நாகராஜ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 4 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையில் பார் நாகராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


இதற்கிடையே மாணவிகளை மிரட்ட வைக்கப்பட்டிருந்த வீடியோ ஒன்று வெளியாகியது, தமிழக மக்களை கோபத்தை ஏற்படுத்தியது. மக்கள் நினைத்துகூட பார்க்க முடியாத கொடூரத்தை மாணவிகள் எதிர்க்கொண்டுள்ளனர் என தெரியவந்தது.


விவகாரம் பூதகரமான நிலையில் இதில் அரசியல் இல்லையென்றும், தீவிரமாக விசாரிக்கிறோம் என்றும் போலீஸ் கூறியது.


ஆளும் கட்சியின் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடியிடம் மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் மேற்கொண்டன.


200-க்கும் மேற்பட்ட பெண்களை வீடியோ எடுத்துள்ளனர் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் போலீஸ் தரப்பில் 4 வீடியோக்கள் மட்டுமே குற்றவாளிகளின் செல்போனில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே புகார் கொடுப்பவர்களை மிரட்டும் வகையில் வரிசையாக வீடியோக்கள் வெளியாகியது. இது விசாரணையை மேலும் சந்தேகத்திற்கு உட்படுத்தியது.


மார்ச் 12-ம் தேதி குற்றவாளிகளின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. 13-ம் தி விசாரணை சிபிசிஐடியிடம் மாற்றப்பட்டது. இருப்பினும் கோரிக்கைகள், போராட்டங்கள் வலுத்த நிலையில் அரசு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்தது.


பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐயிடம் மாற்றுவதற்கு ஆளுநர் அனுமதியை வழங்கினார். இதனையடுத்து வழக்கை சிபிசிஐடி போலீஸ், சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது.


இதுதொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.


பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இதுபோன்ற வீடியோக்களையும், அவர்களுடைய அடையாளத்தையும் யாரும் பகிர வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.