இந்த தேர்தலில் வாக்களிக்க இப்போதும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்… உடனே பதிவு செய்யுங்க…

Read Time:6 Minute, 8 Second

இந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் விண்ணப்பம் செய்யவில்லை என்றால், இப்போதும் அதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 18-ம் தேதி (வியாழக் கிழமை) ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் – மார்ச் 19
மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – மார்ச் 26
மனுக்கள் மீது பரிசீலனை – மார்ச் 27
மனுவை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 29
வாக்குப்பதிவு – ஏப்ரல் 18
ஓட்டு எண்ணிக்கை – மே 23

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்காக விண்ணப்பங்களை அளிப்பதற்கான சிறப்பு முகாம்கள் நிறைவு பெற்றுவிட்டது. உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது, ஆனால் வாக்களிக்க விண்ணப்பிக்கவில்லை என்றால் இப்போதும் இத்தேர்தலில் வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் இறுதி நாளுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அளிக்கலாம்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியாகவும் வேட்பாளர் பட்டியலில் பெயரைச்சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மார்ச் 26-ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதியாகும் ஆகையால் 10 நாட்களுக்கு முன்னதாக அதாவது 16-ம் தேதி (வரும் சனிக்கிழமை) விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

பரிசீலனை செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும், துணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, தேர்தலுக்கு முன்பு வெளியிடப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க, பதிவு செய்து இருந்தால் முகவரி மாற்றம் செய்ய தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தளமான https://www.nvsp.in/ க்கு செல்லுங்கள். இணையதளம் சிலநேரங்களில் அதிக நேரம் எடுக்கும். உங்களுடைய செல்போனில் பதிவு செய்ய முயற்சிப்பதைவிட கம்ப்யூட்டரில் முயற்சி செய்யுங்கள். சற்று பொறுமையாக இருந்து பதிவு செய்யுங்கள்.


தங்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய விரும்புபவர்கள் படிவம் 6-ஐ நிரப்ப வேண்டும். விண்ணப்பம் செய்ய ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வயது – குடியிருப்பு முகவரி ஆதாரம் வேண்டும்.


உயிருடன் இருக்கும் நபர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்களாக குறிப்பிட்டிருக்கலாம், வயது, பெயர் தவறாக இருக்கலாம். இதுபோன்ற விபரங்களை சரிசெய்ய படிவம் 8-ஐ நிரப்ப வேண்டும்.


உங்களுடைய தொகுதிக்கு உள்ளே வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து இருந்தால் படிவம் 8A-ஐ பயன்படுத்துங்கள்.


ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலிலிருந்தும் உங்கள் பெயரை நீக்கிவிட்டு புதிய தொகுதிக்கு மாற்ற விரும்பினால் படிவம் 7 உடன் படிவம் 6-ஐயும் நிரப்ப வேண்டும். படிவம் 6 புதிய தொகுதியில் வாக்களிப்பதற்கு, படிவம் 7-ஐ நிரப்புவதன் மூலம் பழைய தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள படிவங்களை வாக்காளர் பதிவு அலுவலகம், உதவித் தேர்தல் அலுவலகம் மற்றும் உங்கள் தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அளவிலான அலுவலகங்களிலும் பெறலாம். வயது, முகவரி ஆவணங்களுடன், படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு செய்ய வாக்காளர் பட்டியலில் இடம்பெற உங்களுடைய தாசில்தாரையும் அனுகலாம். உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளதா? என்பதை https://electoralsearch.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பரிசோதனை செய்துக்கொள்ளலாம். வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை. தங்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் அடையாளமாக கருத முடியாது. மேலும், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள புகைப்பட அடையாள அட்டை, பான்கார்டு, வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் அளித்துள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை அட்டை, தொழிலாளர் துறை வழங்கிய சுகாதார காப்பீட்டு அட்டை, ஓய்வூதிய ஆவணம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டியும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.