பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதை நிர்ணயம் செய்யும் 5 மாநிலங்கள்…

Read Time:8 Minute, 8 Second

நாட்டின் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 249 தொகுதிகளை (45%) ஐந்து பெரிய மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளது. பா.ஜனதா, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நட்பு கட்சிகள் கடந்த 2014 தேர்தலில் மகத்தான வெற்றியை தனதாக்கியது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் பிரதமர் மோடிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஐந்து பிரதான மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 249 தொகுதிகள் இந்த மாநிலங்களில் உள்ளது. இந்த மாநிலங்களில் பா.ஜனதாவோ, அதனுடைய கூட்டணி கட்சிகளோ அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறவில்லை என்றால் மோடி இரண்டாவது ஆட்சிக்கு வருவது சவாலானதாக இருக்கும்.

இந்த 5 மாநிலங்களில் 2014 தேர்தலில் பா.ஜனதா, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் நட்பு கட்சிகள் மகத்தான வெற்றியை தனதாக்கியது. இந்த மாநிலங்களில் உள்ள 249 இடங்களில் 119 இடங்களை பா.ஜனதா வென்றது. உத்தரபிரதேசம் (71) மகாராஷ்டிரா (23), மேற்கு வங்காளம் (2), பீகார் (22), தமிழ்நாடு (1). கூட்டணி கட்சிகள் மற்றும் நட்பு கட்சிகளின் வெற்றியை கணக்கிடும் போது இந்த எண்ணிக்கை 188 ஆக உயரும். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 61 தொகுதிகளை வென்றது.

உத்தரப் பிரதேசம்

இந்தியாவின் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளது. இம்மாநிலத்தில் 2014 தேர்தலில் பா.ஜனதாவின் செயல்பாடு, 30 ஆண்டுகளுக்கு பின்னர் மத்தியில் ஒரு பெரும்பான்மை கட்சி ஆட்சியமைக்க வழிவகை செய்தது. பா.ஜனதா 73 கூட்டணி தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. ஆனால் இப்போது மாநிலத்தில் இருபெரும் பிராந்திய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்துள்ளது வெற்றியை நோக்கிய பிரதமர் மோடியின் வழியை மறிக்கும் வகையில் உள்ளது. 2014 வாக்கு வங்கி அடிப்படையில் பார்க்கும் போது பா.ஜனதாவைவிட இக்கூட்டணி பெற்ற வாக்கு சதவிதம் அதிகமாகும். இதேமுறையில் வாக்காளர்கள் வாக்களித்தால் பா.ஜனதாவிற்கு பெரும் நெருக்கடியாக அமையும்.

மராட்டியம்

மேற்கு மாநிலமாக இருக்கும் மராட்டியத்தில் உ.பி.க்கு அடுத்தப்படியாக அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மராட்டியத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளது. 2014-ம் ஆண்டில் பா.ஜனதா, சிவசேனாவிற்கு மக்கள் பெரும் ஆதரவை அளித்தனர். பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும் வென்றது. ஒரு தொகுதி ராஜு ஷெட்டி தலைமையிலான ஸ்வாபிமானி பக்ஷாவிற்கு சென்றது. மராட்டியத்தில் தன்னுடைய கூட்டாளியான சிவசேனாவுடன் பா.ஜனதா ஏற்கனவே கூட்டணியை உறுதிப்படுத்தியது. உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை கட்சி பெற முடியாவிட்டாலும் மராட்டியத்தில் இக்கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்கும் என பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்காளம்

உத்தரப்பிரதேசம் மற்றும் மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக்க 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளம் மாநிலம் மூன்றாவது மிக முக்கியமான மாநிலமாக உள்ளது. மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், தன்னுடைய பலத்தை காட்டுவதற்கு பா.ஜனதா முயற்சியை மேற்கொள்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் மம்தா கட்சிக்கு போட்டியை கொடுத்தது. 2014 தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களை வென்றது. காங்கிரஸ் 4 தொகுதிகளையும், பா.ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரு இடங்களை கைப்பற்றியது. பா.ஜனதாவின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்தது.

இப்போது மேற்கு வங்காளத்தில் அதிகமான தொகுதியை கைப்பற்ற வேண்டும் என பா.ஜனதா முயற்சி செய்கிறது. மம்தாவை தாண்டி அதனை பெற முடியுமா? என்பது மே 23-ல் தெரியவரும். 2014-ம் ஆண்டே போன்று மக்கள் வாக்களித்தால் பா.ஜனதா நிலை சிக்கலாகவே அமையும்.

பீகார்

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. மாநிலத்தில் கட்சியின் செயல்பாடு நன்றாகவே உள்ளது. நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இவ்வாண்டு தொகுதி பங்கீட்டிலும் சுமூகமாக இரு கட்சிகளும் நடந்துக்கொண்டது. 2014 தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 31 இடங்களை வென்றது. (பா.ஜனதா – 22, லோக் ஜனசக்தி – 6 மற்றும் ராஷ்டீரிய லோக் சம்தா கட்சி – 3), நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியை தழுவியது. ஒரு தொகுதியில்கூட வெற்றிப்பெறவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மொத்தம் 7 இடங்களை வென்றது (ராஷ்டீரிய ஜனதா தளம் – 4, காங்கிரஸ் – 2 மற்றும் தேசியவாத காங்கிரஸ் – 1). இங்கு பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்து இருந்தாலும், காங்கிரஸ்-ராஷ்டீரிய லோக் தளம் மற்றும் பிற கட்சிகள் என்ற வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் உள்ளது.

தமிழகம்

தமிழகம் எந்தவொரு கட்சிக்கும் மிக முக்கியமானதாக உள்ளது, ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், பீகாருக்கு அடுத்தப்படியாக அதிகமான தொகுதிகளை தமிழகம் கொண்டுள்ளது. 39 தொகுதிகள் உள்ளது. 1967-ல் இருந்து தமிழகம் பெரும்பாலும் திமுக-அதிமுக என்ற இரு பிராந்திய கட்சிகளாலே ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. கடந்த தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் வென்றது.

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் வென்றது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 37 இடங்களில் வென்றது. இப்போது அதிமுக கூட்டணியில் பா.ஜனதா 5 தொகுதிகளை பெற்றுள்ளது. ஆனால் பெரும் ஆளுமையாக இருந்த ஜெயலலிதா இல்லாத காரணத்தினால் இந்த கட்சிகள் கடந்த தேர்தலை போன்ற வெற்றியை பெறுவது சவாலானது. கடந்த முறை திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. இப்போது ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் இந்த தேர்தல் நடக்கிறது.