சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் காட்டுத் தீயால் 300 ஏக்கர் வனம் பாதிப்பு

Read Time:2 Minute, 30 Second

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் காட்டுத் தீயால் 300 ஏக்கர் வனப்பகுதி சேதம் அடைந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம் என மொத்தம் 7 வனச்சரகங்கள் உள்ளன. மூலிகைகள் அதிகம் கொண்ட வனத்தில் இப்போது வறட்சி நிலவுகிறது. விலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள மரம் செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது.

எனினும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மீண்டும் காட்டு தீ பற்ற தொடங்கி உள்ளது.

தாளவாடி அருகே கேர்மாளம் வனச்சரகத்திக்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பரவியது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான மரம் செடி கொடிகள் எரிந்து நாசம் ஆகின என தெரிவிக்கப்படுகிறது.

அதே போல் வனப்பகுதி வழியாக மலைக்கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பம், கம்பிகளும் தீப்பிடித்து எரிந்தது. இதில் மின்கம்பங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன. மேலும் தீயில் கருகி மரங்களும் ரோட்டில் விழுவதால் மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதால் வனவிலங்குகள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைத்த பின்னர்தான் அவ்வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும், மின்கம்பங்கள் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.