ராமேசுவரம் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் பொறிக்கப்பட்டுள்ள பொன்மொழிகள்:-

Read Time:6 Minute, 26 Second

இந்தியாவின் விண்வெளித் துறையுடன் தன்னுடைய பணத்தை முடிக்காமல் எதிர்கால இந்தியாவின் மன்னர்களாம் இளைஞர்களை “கனவு காணுங்கள் கனவு காணுங்கள்” என கூறி ஒவ்வொரு இந்திய இளைஞரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தவர். குடியரசுத் தலைவர் பதவி காலத்திற்கு பின்னர் நாடு முழுவதும் பயணம் செய்து கல்லூரி, பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் கடந்த 27.07.2015 அன்று மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது உயிரிழந்தார்.

பின்னர் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அவரது நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் ‘அப்துல் கலாம் தேசிய நினைவகம்’ அமைக்கப்பட்டது. நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தபடி அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் இமயமாக இருக்கிறார்.

இன்னும் அவருடைய பொன்மொழிகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அப்துல் கலாமின் பொன்மொழிகள் மனதிலிருந்து மறையா பொக்கிஷங்களாகும். அவருடைய நினைவிடத்தில் செல்போன்களுக்கு அனுமதி கிடையாது. அங்கு சென்றால் அமைதியான சூழ்நிலையும், பொறிக்கப்பட்டுள்ள பொன்மொழிகளும் புது உத்வேகம் அளிக்கிறது. அங்கு பொறிக்கப்பட்டுள்ள பொன்மொழிகள்:-


நமது பிறப்பு
ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால், இறப்பு
ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.


அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.


வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள்,
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்,
ஒரு இலட்சியம் – சாதியுங்கள்,
ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்,
ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள்,
ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்…


நாம் அனைவரும் நமக்குள்ளே
ஒரு தெய்வீக அக்னியுடன்
பிறந்திருக்கிறோம்.
இந்த அக்னியைக் கொழுந்துவிட வைத்து
அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக
முனைவது நம்முடைய கடமை.


ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு
இந்த மூன்று அம்சங்கள்தான்
செயல்திட்டத்தின் தாரக மந்திரங்கள்.


கனவு காணுங்கள் ஆனால்…
கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல…
உன்னை தூங்கவிடாமல் செய்வதே…


நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.
பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும்


கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும்,
வேலை வாய்ப்பையும்
அடிப்படையாகக் கொண்டதல்ல.
அதன் உண்மையான நோக்கம்…….
உளப்பூர்வ விவேகத்தினூடே
ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.


எதிர்பாராத விஷயங்களை
எதிர்பார்க்க கற்றுக்கொள்வதுதான்
உங்களை
இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும்…


நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,
எப்போதுமே மண்டியிடுவது இல்லை…


ஒரு மெழுகுவர்த்தி
மற்றொரு மெழுகுவர்த்திக்கு
ஒளி கொடுப்பதால்
அதற்கு இழப்பு எதுவுமில்லை…


வாழ்க்கையில் வெற்றிப்பெற
வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை
ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றிப்பெற
வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை.


நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால்,
முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.


உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்.
லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு.
அதை அடைய உழைப்பு முக்கியம்.
உழை, உழைத்துக் கொண்டேயிரு.
விடாமுயற்சி உனக்கிருந்தால்
நீ யாராக இருந்தாலும்
வெற்றி உன்னை வந்து சேரும்.


வானத்தை பாருங்கள்
நாம் ஒன்றும் தனித்துவிடப்பட்டவர்கள் இல்லை
இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பு பாராட்டுகிறது
கனவை நனவாக்கும் காரியங்களில் எவர் ஒருவர்
முழு மூச்சாக இறங்குகிறாரோ
அவருக்கு நல்லவை எல்லாம்தர
இரகசிய ஒப்பந்தமே போடுகின்றன


இளைஞர்கள்-மாணவர்களுக்கு அவர் அளித்த உத்வேகமும் சற்றும் குறையாமல் இருந்து வருகிறது. அவருடைய பொன்மொழிகள் ஏராளமாகும்.