பாதுகாப்பானது என சான்றழிக்கப்பட்ட நடைமேம்பாலம் விழுந்து 6 பேர் உயிரிழப்பு

Read Time:3 Minute, 36 Second

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் ரெயில் (சி.எஸ்.எம்.டி.) நிலையத்தில் பயணிகள் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்தனர்.

ரெயில் நிலையம் பகுதியில் பயணிகள் வசதிக்காக அங்குள்ள பி.டி.லேன் பகுதியையும், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் அங்குள்ள சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் இருந்தது. நேற்று மாலை இந்த பாலம் வழியாக பொதுமக்கள் சென்றுக்கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் திடீரென அந்த நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கீழே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், பாலத்தில் சென்றவர்கள் சிக்கினர். இந்த விபத்து சம்பவத்தில் 6 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டது

மும்பையில் நேற்று விபத்து நேரிட்ட மேம்பாலம் ஏற்கனவே பாதுகாப்பானது என சான்றிதழ் அளிக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் நடைமேம்பாலத்தில் நெரிசல் ஏற்பட்டும், இடிந்து விழுந்தும் விபத்து நேரிட்டது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இச்சம்பவங்களை அடுத்து ரெயில்வே தரப்பில் நடைமேம்பாலங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. நேற்று விபத்து நேரிட்ட மேம்பாலத்தில் 6 மாதங்களுக்கு முன்னதாக ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று பாதுகாப்பானது என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்போது நடந்துள்ள விபத்து அதிகாரிகள் மேற்கொண்ட பாதுகாப்பு சர்வேயின் மதிப்பீட்டின் தரம் தொடர்பாக கேள்விகளுக்கு வழிவகை செய்துள்ளது.

“மேம்பாலம் உறுதியாகவே உள்ளது, பயணிகள் பயன்படுத்தலாம்” என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது. இப்போது விசாரணைக்கு இந்த அறிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கீழே விழுந்த நடைமேம்பாலத்தில் நேற்று பராமரிப்பு பணியும் நடைபெற்றுள்ளது. அவ்வழியாக பயணிகளின் வருகையை தடுக்காமல் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிக்னலால் உயிர்தப்பிய மக்கள்

நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தின்போது கீழே உள்ள சாலை சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. இதனால் நடைமேம்பலத்திற்கு கீழே கடந்து செல்ல மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் காத்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைந்தனர். விபத்து நேரிட்ட போது நடைமேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் போக்குவரத்து இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.