நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு, ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் தாக்குதல்

Read Time:5 Minute, 14 Second

நியூசிலாந்து மசூதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பெரிய மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்த போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள், பலர் தரையில் படுத்துக்கொண்டனர். இருப்பினும் துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர் என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. இதே போன்று அப்பகுதியில் உள்ள மற்றொரு மசூதியிலும் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியது. மிகப்பெரிய தாக்குதலாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மசூதிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கிறிஸ்ட் சர்ச் நகரில் பள்ளி, கல்லூரிகளை மூடி யாரையும் வெளியே அனுப்ப வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும் பள்ளி சென்ற குழந்தைகளை அழைத்துவர பெற்றோர்கள் வெளியேற வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

எத்தனை இடங்களில் இதுபோன்று துப்பாக்கிசூடு நடக்கிறது எனத் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவன் பொதுமக்களை மார்பை குறிவைத்து தாக்கியுள்ளான் என நேரில் பார்த்தார்கள் தெரிவித்தனர்.

கருப்பு நாள்

துப்பாக்கி சூடு தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. நாடு முழுவதும் பெரும் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் பேசுகையில், “தாக்குதல் தொடர்பான முழு விபரங்கள் இன்னும் தெளிவாகவில்லை. இது நியூசிலாந்துக்கு ஒரு கருப்பு நாள்,” என கூறியுள்ளார். இதற்கிடையே ஒருவரை போலீஸ் காவல் எடுத்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

40 பேர் உயிரிழப்பு

ஜெசிந்தா அர்டர்ன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மசூதிகளில் நடத்தப்பட்டது பயங்கரவாத தாக்குதலாகும். தாக்குதலில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை நியூசிலாந்து கொடுக்கும் என குறிப்பிட்டார். பயங்கரவாதி ஒருவன் காரில் இருந்து பெருமளவு வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நாடத்தியதில் ஒருவன் ஆஸ்திரேலியாவின் வலதுசாரி அமைப்பின் தலைவன் என ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். தாக்குதல்தாரிகள் தொடர்பாக பிற தகவல்கள் வெளியாகவில்லை.துப்பாக்கி சூடு நடத்தியவன் வீசா தடை பட்டியலில் இடம்பெறவில்லை, உளவுத்துறை தோல்வியா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.இருநாடுகளும் விசாரணையை தீவிரப்படுத்துகிறது.

வங்கதேசம் கிரிக்கெட் அணியினர்

இதற்கிடையே வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த மசூதிக்கு தொழுகைக்காக சென்றனர். ஆனால், துப்பாக்கிச் சூடு குறித்து கேள்விப்பட்டதும் அங்கிருந்து வெளியேறி உயிர் தப்பினார்கள். “வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் மசூதிக்கு தொழுகைக்கு செல்வதற்காக பஸ்ஸில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.