ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பேச அனுமதி வழங்கியது எப்படி? விசாரணை

Read Time:3 Minute, 8 Second

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட கூட்டத்துக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டு கல்லூரி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த 13-ம் தேதி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3000 மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். பணமதிப்பு நீக்கம், ரபேல் விமான கொள்முதல், மோடியின் மீதான விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குப் பதிலளித்து அனைவரையும் கவர்ந்தார். இந்தியா முழுவதும் ஊடகங்களில் செய்தியானது, பேசப்பட்டது.

ராகுல் காந்தி கல்லூரியில் பேசியது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் என பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் கல்லூரிக் கல்வி நிர்வாக இயக்குனர் இரா. சாருமதி சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

”கடந்த 13-ம் தேதி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர் கலந்துகொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் உள்ள நிலையில், எவ்வாறு இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்கிற விவரத்தினை உடனடியாக தாங்கள் ஆய்வு மேற்கொண்டு இவ்வலுவலகத்திற்கு வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் கூறியது என்ன?

ராகுல் காந்தி பேசியது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் செய்தியாளர்கள் ஏற்கனவே கேள்வியை எழுப்பி பதிலை பெற்று இருந்தனர். சத்யபிரதா பதிலளிக்கையில், வேறு நிகழ்ச்சிக்காக ஒப்புக்கொண்டுவிட்டு அரசியல் நிகழ்ச்சியாக நடத்தினாலோ அல்லது ஓர் அரசியல் கட்சி கல்லூரியில் பேசினாலோ விதிமீறல் ஆகும். இந்த நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகம் ராகுலை எம்.பி. என்கிற முறையில் அழைத்துள்ளது. அது விதிமீறல் ஆகாது என தெரிவித்தார்.

இதன்பின்னர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையமே சொன்னபிறகு ராகுல் பங்கேற்ற கல்லூரியை மிரட்டுவதா? என தமிழக அரசுக்கு காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.