40 தொகுதிகளில் போட்டியிட களஆய்வு; விரைவில் விருப்ப மனு, நேர்காணல் – ஜெ.தீபா அடுத்த அதிரடி

Read Time:4 Minute, 9 Second

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முக்கால்வாசி பணியை அரசியல்கட்சிகள் முடித்துவிட்டது. இவ்வரிசையில் கடைசியாக களமிறங்கியுள்ளார் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஜெ.தீபா. 40 நாடாளுமன்றத் தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடர்பாக கட்சியிலிருந்து அறிவிப்பு வெளியானது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொண்டர்களின் விருப்பம் காரணமாக தேர்தலில் போட்டியிட உள்ளோம். யாருடனும் கூட்டணி கிடையாது என்றார்.

அனைத்து தொகுதிகளிலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை போட்டியிட உள்ளது. 40 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஆதரவு எந்த அளவு உள்ளதோ அதை ஒட்டி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவெடுக்க உள்ளோம். 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிட உள்ளோம் என கூறியுள்ளார்.

இடையில் காணாமல் போன நீங்கள் மீண்டும் அரசியலில் திடீரெனத் தோன்றுகிறீர்கள்? இதற்கு காரணம் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நான் வீட்டிலிருந்து வெளியே சென்றே அதிக நாட்கள் ஆகின்றன. எப்போதுமே ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட். வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம் என்கிற எண்ணம் உடையவள். அரசியல் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று போகிறேன். மிரட்டல் அரசியல் வேண்டாம் என நினைக்கிறேன்.

கட்சி அரசியலில் இருக்கிறோம். காணாமல் போக முடியாது. நான் ஏற்கெனவே சொன்னபடி என்னையும், இந்த இயக்கத்தையும் அழிக்க பெரிய கூட்டம் இயங்கியது. அதை சரி செய்ய இத்தனை காலம் பிடித்தது. அதை எல்லாம் களை எடுத்துவிட்டு, சரி செய்துவிட்டு தற்போது வழி நடத்துவதற்காக ஆயத்தமாக இருக்கிறேன். அந்த நேரத்தில் அதிமுகவில் சேர எனக்கு அழைப்பு விடுத்தார்கள். நாங்களும் அணுகினோம். இறுதியில் தனியாக போட்டியிடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? என்ற கேள்விக்கு, நீங்கள் உறுப்பினர் என்று சொல்வதைவிட கட்சி நிர்வாகிகள் 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்று பதில் அளித்தார். 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் உள்ளனரா? என்ற கேள்விக்கு, அதுதான் கள ஆய்வு நடத்தி பின்னர் முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளேனே. 18 தொகுதிகளில் போட்டியிட திறமையான கள வேட்பாளர்களை அரைமணி நேரத்தில் என்னால் அறிவிக்க முடியும். ஆனால் 40 தொகுதிகளில் வேட்பாளர் என்பது கள ஆய்வு நடத்திய பின்னர்தான் முடிவெடுக்கப்படும் என்றார். நீங்கள் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்கு, ன் போட்டியிடும் எண்ணமில்லை, அப்படி இருந்தால் நாடாளுமன்றம் மூலமாகத்தான் அது இருக்கும் என கூறியுள்ளார்.

ஜெ. தீபா போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் வகையில் பேட்டியளித்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.