விவசாய நிலங்களில் இயங்கும் 110 மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

Read Time:2 Minute, 23 Second

விவசாய நிலங்களில் இயங்கும் 110 மதுக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வழியாகதான் மாணவர்களும் பள்ளிக்கு செல்கிறார்கள். இதனால் அனைத்து தரப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே, அந்த டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் எத்தனை என கேள்வி எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறுவர்கள் டாஸ்மாக் கடைகளில் மது அருந்துவதைத் தடுக்கும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் ஏன் கண்காணிப்புக் கேமிராவைப் பொருத்தக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தமிழகம் முழுவதும் 110 டாஸ்மாக மதுபான கடைகள் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே உரிய அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் செயல்பட்டு வரும் 110 டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதுதொடர்பான அறிக்கையை வரும் மார்ச் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.