பா.ஜனதா ஆட்சி அமைப்பதில் துருப்புச் சீட்டுகளாக மாறும் தென்னிந்திய கட்சிகள்…!

Read Time:3 Minute, 52 Second

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஆட்சி அமைக்கும் துருப்புச் சீட்டுகளாக தென்னிந்திய கட்சிகள் இருக்கும் என தெரிகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு ஏராளமான திட்டங்களையும், நல உதவிகளையும் செய்துள்ளதாக பிரச்சாரம் செய்தபோதிலும், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அதிருப்தியும் நிலவுகிறது. இதற்கிடையே சி-வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மைக்கு 8 இடங்கள் குறைவாக 264 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு என தெரியவந்துள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 141 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது.

உ.பி.யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி 80 இடங்களில் 47 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சிகளின் ஆதரவு பா.ஜனதாவிற்கு கிடைக்க வாய்ப்பு கிடையாது. ஆந்திராவை பொறுத்தவரையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 14 இடங்களில் வெல்லவே வாய்ப்புள்ளது. மேற்கு வங்காளத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 வரை பெறலாம். இந்த கட்சிகள் எல்லாம் பா.ஜனதாவிற்கு எதிராக உள்ளது, ஆதரவுக்கு வாய்ப்பு கிடையாது.

இதுவே ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 இடங்களையும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 9 இடங்களையும், தெலுங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 17 இடங்களில் 16 இடங்களையும் வெல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மூன்று கட்சிகளும் 36 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிகிறது. இந்த 3 கட்சிகளும்தான் அடுத்து மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை முடிவு செய்யும் துருப்புச் சீட்டுகளாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே சரிசமமான இடைவெளியைப் பராமரித்து வருகின்றது. இரண்டு கட்சிகளுடன் மோதல் போக்கையும், நெருக்கமான நட்புறவையும் இந்த 3 கட்சிகளும் கொண்டிருக்கவில்லை. ஒருவேளை தேர்தலுக்குப் பின்னர் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இந்த 3 கட்சிகளின் ஆதரவு கரம் நீட்டும் பட்சத்தில் பெரும்பான்மை மட்டுமல்லாமல், அறுதிப் பெரும்பான்மையை நோக்கி நகரலாம். ஆதலால் இந்த 3 கட்சிகளை பாஜக தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கும். பிராந்திய கட்சிகள்தான் தேர்தலுக்கு பின் யார் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிப்பவர்ரகளாக இருப்பார்கள் எனவும் பார்க்கப்படுகிறது.