தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடிய 10 பேர் கைது…

Read Time:3 Minute, 30 Second

தடை செய்யப்பட்ட பப்ஜி செல்போன் கேம் விளையாடியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. `Player’s Unknown Battle Ground’ என்பதன் சுருக்கமே ‘PUBG’. ஐரிஸ் நாட்டின் ’பிராடன் கிரீனி’ என்பவர் உருவாக்கிய இந்த கேமை, உலகம் முழுவதும் 10 கோடி பேர் தினமும் விளையாடி வருகின்றனர். முதலில் வெளிநாடுகளில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த கேம், கடந்த 2018 மார்ச் மாதம் தான் இந்தியாவில் அறிமுகமானது.

அறிமுகமாகிய சில மாதங்களில் கேமுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகமாக தொடங்கியது. புளூவேல் அளவுக்குஇது பாதகமான கேமாக தெரியாவிட்டாலும், இந்த விளையாட்டால் உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது. கேம் ஈர்ப்பதற்கு முக்கிய காரணமே, இந்த கேமில் பயன்படுத்தப்பட்ட உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பம், புதிய ஐடியாக்கள், அதிகபடியான ஆயுதங்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவது தான். கடந்த அக்டோபரில் டெல்லியில்

இந்த விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வன்முறையை விதைக்கும் இந்த கேம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனை தடுக்க ராஜஸ்தான் காவல் துறை நடவடிக்கையை மேற்கொண்டது. பப்ஜி, மோமோ சேலஞ்ச் ஆகிய செல்போன் ஆன்-லைன் கேம்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ராஜ்கோட் நகர காவல் துறை ஆணையர் மனோஜ் அகர்வால் கடந்த உத்தரவிட்டார். இதுதொடர்பான உத்தரவு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. தடையை மீறி கேம்களை ஆன்-லைனில் விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர் என போலீஸ் தெரிவித்துள்ளது.

இது தவிர இந்த விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு 33 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு குஜராத் மாநில கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே பப்ஜி நிறுவனம், பப்ஜி விளையாட்டு வெறும் செல்போன் விளையாட்டு மட்டுமேயாகும். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காகவும், ஆரோக்கியமான முறையில் வாழ்வை கழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிறுவனத்தின் நோக்கம், குறிக்கோள்களை எடுத்துக்கூறி தடையை வாபஸ் பெற முயற்சி செய்யப்படும் என்று கூறியுள்ளது.