பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Read Time:3 Minute, 46 Second

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தில் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது. கோவை எஸ்.பி. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும், அடையாளங்களையும், முதல் தகவல் அறிக்கை மற்றும் கோர்ட்டு ஆவணங்கள், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228-ஏ பிரிவின் கீழ் 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கலாம்.

ஆனால் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை வெளியிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் சம்பவ வீடியோ, புகைப்படம், ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த பெண்ணின் தனிப்பட்ட விவரத்தை வெளியிட்டது ஏன்? இனி இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவார்கள்? என கேள்வியை எழுப்பியது. பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அடையாளம் வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்டட் மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பலாத்கார வழக்குகளை கையாள ஒரு தனி மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றனவா? என்பதை அடுத்த விசாரணையில் தெளிவுபடுத்த வேண்டும்.

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை நீக்கி, புதிதாக அரசாணை வெளியிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றம். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும். வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என உத்தரவிட்டது.