போராட்டத்தின் போது பெண் போலீசாரிடம் தவறாக நடந்துக்கொண்ட அதிகாரி… விசாரணைக்கு உத்தரவு

Read Time:2 Minute, 46 Second

போராட்டத்தின் போது பெண் போலீசாரிடம் உயர் அதிகாரி தவறாக நடந்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தமிழகத்தில் வைரலாக பரவி வருகிறது. பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டம் நடத்தியவர்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளார். அப்போது ஆண் போலீஸ் ஒருவர் அவரிடம் தவறாக நடக்கிறார். பெண் போலீஸ் அதிகாரியை தவறான முறையில் தொடுகிறார். இது வேண்டுமென்றே செய்ததா? தெரியாமல் நடந்ததா? என்பது தெரியவில்லை. ஆனால் வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண் அதிகாரி, பலமுறை ஆண் அதிகாரியின் கையை தள்ளுகிறார்.

இப்போது இவ்வீடியோ காவல்துறையின் செயல் குறித்த விமர்சனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். பெண் அதிகாரி கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஆண் அதிகாரி துணை கமிஷ்னர் ஆர். ஜெயராமன். தமிழகத்தில் 17 வயது மாணவி அனிதா உயிரிழந்த போது நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

துணை கமிஷ்னர் ஜெயராமன் தி நியூஸ் மினிட் இணையதளத்திடம் பேசுகையில், “போராட்டம் நடைபெற்ற போது நிலையை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். எனக்கு எந்தஒரு உள்நோக்கமும் கிடையாது. எனக்கு முன்னதாக பெண் நின்றது கூட எனக்கு தெரியாது.” எனக் கூறியுள்ளார். பெண் அதிகாரி தொடர்ந்து அவருடைய கையை தள்ளும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஆனால், “மீடியாக்கள்தான் வீடியோவை மீண்டும், மீண்டும் போட்டு அவ்வாறு காட்டுகிறது, என்மீது கலங்கம் ஏற்படுத்துவதற்காக இப்படி செய்யப்படுகிறது,” என ஜெயராமன் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என கோவை கமிஷ்னர் அமல்ராஜ் கூறியுள்ளார். ஜெயராமன் மீது இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உயர் அதிகாரிக்கு எதிராக புகார் கொடுக்க பெண் அதிகாரி முன்வரவில்லை.