நீங்கதான் முதல்வர்…! நீங்கதான் பிரதமர்…! புதிய கூட்டணி உதயம்

Read Time:2 Minute, 52 Second

நீங்கதான் முதல்வர்…! நீங்கதான் பிரதமர்…! என்று பவன் கல்யாண் மற்றும் மாயாவதி இடையே புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

ஆந்திர மாநில முன்னணி நடிகரான பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். அவருடைய கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா கட்சி முயற்சியை மேற்கொண்டது. ஆனால் பா.ஜனதா எங்களுக்கு ஒன்றும் தேசப்பற்றை கற்றுக்கொடுக்க வேண்டாம் என காட்டமாக கூறி அதற்கு முற்றுப்புள்ளியை வைத்தார்.ஆந்திரா மாநிலத்தி ல் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது.

இங்கு போட்டியிடும் பவன் கல்யாண் கட்சி, தெலுங்கானாவிலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம், பா.ஜனதா, காங்கிரஸ், ஜனசேனா என நான்கு முனைப்போட்டிக்கு வழிஏற்பட்டுள்ளது. முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்க முயற்சியை மேற்கொண்டார். இதிலிருந்து சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் விலகியது. இப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் களமிறங்கியுள்ளது. பவன் கல்யாண் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானாவில் இக்கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணியை அறிவித்து மாயாவதி பேசுகையில், ஆந்திர மாநில மக்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தலிலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். புதியவர்கள் அரசுக்கு வரவேண்டும் என்பது மக்களின் ஆர்வமாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனசேனா மற்றும் பிற பிராந்திய கட்சிகளுடன் நாங்களும் இணைந்து போட்டியிடுகிறோம் என்றார்.

கூட்டணி அறிவிப்பின் போது இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். மாயாவதி பேசுகையில் நீங்கள் ஆந்திர மாநில முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பவன் கல்யாண், நீங்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என மாயாவதியிடம் தெரிவித்துள்ளார். நீங்கள் பிரதமர் ஆவதுதான் எங்களுடைய விருப்பமாகும் என குறிப்பிட்டுள்ளார்.