ஸ்ரீராமரிடம் அனுமன் கொண்ட பக்தி… செந்தூரம் பூசுவது ஏன்?

Read Time:7 Minute, 56 Second

அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் சிவ சொரூபம் என்பார்கள். செந்தூரம் அனுமனுக்கு மிகப் பிடித்தமானது. செந்தூரம் இட்டுக்கொள்வதை மிகவும் விரும்புவார். ஒருமுறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்த அனுமன், அதுபற்றி அவரிடம் கேட்டார். ‘தாயே! தாங்கள் நெற்றில் செந்தூரம் வைத்துக்கொள்ள என்ன காரணம்?’. ‘எனது கணவர் ராமபிரான் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே, என்னுடைய நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்கிறேன்’ என்று பதிலளித்தார் சீதாதேவி.

அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டாராம். இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும், எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். அந்த செந்தூரத்தையே, அனுமனின் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்குகிறார்கள். அனுமனும் தன் திருமேனி முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டதற்கு வேறொரு திருக்கதையும் உண்டு.

ஸ்ரீராமரை ஓரு கணம் கூட விடாமல் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்க விருப்பம் கொண்டவர் அனுமான். சதாசா்வ காலமும் ஸ்ரீராமனைப் பிரியாது அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதே அனுமனின் விருப்பம். காட்டிலும், போரிலும் இருந்தவரை இதற்குத் தடையொன்றும் ஏற்படவில்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு ஸ்ரீராமனுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார். எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. நாட்டிற்கு வந்து பட்டாபிஷேகத்திற்கு பின்னர் முதல் நாள் பகல் பொழுது முடிந்து இரவு வந்தது.

பகல்நேரப் பணியாளா்கள் யாவரும் வீடுகளுக்குத் திரும்ப, இரவுநேரப் பணியாளா்கள் வந்து தங்களது பணியை தொடங்கினாா்கள். ஸ்ரீராமா், ஆஞ்சநேயரை அழைத்து, ‘‘ஆஞ்சநேயா! நீயும் போ! இரவு நேரம் வந்துவிட்டது. உனக்காக ஒதுக்கப்பட்ட மாளிகைக்குப் போய் ஓய்வெடுத்துக் கொண்டு, நாளை காலையில் மறுபடியும் வா!” என்றாா். இதனால் அதிர்ந்த அனுமான், சுவாமி, ராமசேவைக்குப் பகலில் இருந்த இடையூறுகள் இரவில் இருக்காது என்று எண்ணினேன். இரவு முழுவதும் உங்களின் திருவடிகளுக்கு சேவை செய்யலாம் என்று நினைத்தேன்; என்னை விரட்டுகிறீா்களே! என்ன நியாயம் இது? உங்களை விட்டுவிட்டு, நான் போய் ஓய்வெடுப்பதாவது? ஆகவே, நான் உங்களைவிட்டுப் பிரிய மாட்டேன்” என்று அழுத்தமாக கூறிவிட்டார்.

இதைக்கேட்டு மனம் நெகிழ்ந்த ஸ்ரீராமர் ‘அனுமனுக்குத்தான் என் மீது எவ்வளவு பக்தி, எவ்வளவு பாிவு!’ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு… “சாி ஆஞ்சநேயா! படுக்கை அறையிலும் நீ கொஞ்ச நேரம் இருக்கலாம்” என்றாா். மகிழ்ச்சியடைந்த அனுமான், அதுயென்ன கொஞ்ச நேரம்? என்ற கேள்வியை தொடங்கினார். இதற்கு பதிலளிக்க முடியாத ஸ்ரீராமர் மஞ்சத்தில் சாய்ந்தாா். அப்போது சீதாதேவியின் வருகையை கொலுசுச் சத்தம் அறிவித்தது. அப்போது, ராமா் தன்தலையை சற்று திருப்பி ஆஞ்சநேயரைப் பாா்த்து, ‘நீ செல்லலாம்’ என் கண்ணசைவில் கூறினார்.

மறு கணமே ‘‘நான் ஏன் போக வேண்டும்?” என்று அஞ்சநேயரிடம் இருந்து கேள்வி. அப்போதே சீதாதேவி கையில் தீா்த்தப் பாத்திரத்துடன் நின்றாா். `ஆஞ்சநேயா! புாிந்துகொண்டாயா? சீதை வந்து விட்டாள். நீ போகவேண்டியது தானே’ எனச் சொல்லாமல் சொன்னது, ராமாின் பாா்வை. உடனடியாக அம்மாவுக்கு அப்படி என்ன விசேஷம்? என்ற கேள்வி அனுமனிடம் இருந்து.

எப்படி புரிய வைப்பது என யோசித்த ஸ்ரீராமர் பதிலை கூறுகையில், “அம்மாவின் வகிட்டில் பாா்! குங்குமம் வைத்து கொண்டிருக்கிறாள் அல்லவா?அந்தச் செந்தூரக் குங்குமத்தால் வந்த விசேஷம்தான்” என்று கூறிவிட்டார்.

உடனடியாக இதுதான் விஷேசமா என்று மகிழ்ச்சியில் துள்ளிய அனுமனுக்கு, நாமும் செந்தூரம் பூசிக் கொண்டிருந்தால் எப்போதும் ஸ்ரீராம நாமம் ஜெபித்து, ராமச்சந்திர மூா்த்தியுடன் இருக்கலாமே… என்று நினைக்க தொடங்கினார். அந்த இரவில் வெளியே ஓடிச்சென்று அங்காடி ஒன்றை கண்டுபிடித்தார். அது மூடப்பட்டிருந்தது. அதற்காக அனுமன் கவலைப் படவில்லை. ஒரு நொடியில் கதவை அப்படியே கழற்றி அகற்றிவிட்டு, உள்ளே நுழைந்தார். செந்தூரப் பெட்டியையும் கண்டுபிடித்துவிட்டார். கொஞ்சம் எடுத்து சீதையை போலவே வகிட்டில் இட்டுக் கொள்ளலாம்… என்று நினைத்த வருக்கு பெரும் சந்தேகம்.

சீதா தேவி அன்னை வகிட்டில் உள்ள செந்தூர விசேஷத்தால்தான் அவளை எந்நேரமும், சுவாமி தன்னுடன் வைத்துக்கொண்டிருக்கிறாா். எனினும், மற்றொரு கோணத்தில் பார்த்தால்… சீதாதேவியும் ராமரை பிரிந்து பத்து மாதங்கள் தவிக்கவேண்டி வந்ததே. ராவண சம்ஹாரம் முடிந்தபிறகும், ‘நீ எங்கு வேண்டுமானாலும் போய் இரு’ என்று சீதையிடம் ராமா் சொல்லும்படி ஆயிற்றே! இதற்கெல்லாம் காரணம் சீதாதேவி, வகிட்டில் மட்டுமே செந்தூரம் இட்டுக்கொண்டிருப்பதுதான் என்று யோசித்துவிட்டார்.

இந்த நிலை நமக்கு ஏற்படக்கூடாது என்று உடம்பு முழுவதும் செந்தூரத்தைப்பூசிக் கொள்வோம் என்று அப்படியே செய்துக்கொண்டார். ஆஞ்சநேயர் செந்தூரத்தை அள்ளி தன் திருமேனியில் – தலை முதல் கால் வரை அப்பிக்கொண்டு, செந்தூர ஆஞ்சநேயராகப் போய், ராமாின் பள்ளியறை முன்னால் நின்றாா். அவருடைய அந்த அழகை காண சூரியனும் செந்நிறத்தில் கதிர்களை வீசிக்கொண்டு வந்தான். விடியல் ஆரம்பித்தது! காலை எழுந்து வெளியே வந்த ஸ்ரீ ராமசந்திரமூா்த்தி, ஆஞ்சநேயரைக் கண்டு அவரது உள்ளுணா்வை அறிந்து அப்படியே கட்டித்தழுவிக் கொண்டாா்…! அவரிடம் பேசவே வார்த்தையில்லை… அனுமனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி.

அனுமான் “உன் உடம்பில் பூசப்பட்டு இருப்பது குங்குமமில்லை செந்தூரம்” என்று சொல்லி தொடங்கி விட்டார்கள். ஸ்ரீராம பக்தியின் தீவிரத்தைக் காட்டும் செந்தூரம் ஆஞ்சனேயருக்கு மிகவும் பிடித்தது. அவருக்கு மிகவும் பிடித்தமான செந்தூரம் சாத்தி வழிபடுவோம், அருள் பெறுவோம்.