சூடுபிடிக்கும் அரசியல்.. 2019 தேர்தலில் மையமான மதுரை களம்… மு.க. அழகிரி அதிரடி

Read Time:5 Minute, 4 Second

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரையில் கூட்டணி பகிர்வு, யாருக்கு எந்த தொகுதி என்பது தொடர்பான தகவல்கள்தான் வெளியாகியது. வேட்பாளர்கள் தொடர்பான எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. இதற்கிடையே அமைதியாக இருந்த அமமுக சார்பில் 24 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் அறிவிப்பினால் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

மதுரை மண்டலத்தை பொறுத்தவரை நீண்டகாலமாகவே அதிமுகவிற்கு வாக்கு வங்கியை கொண்ட பகுதியாக உள்ளது. அதேசமயம் திமுக சரியான போட்டியை ஏற்படுத்தும் அளவுக்கு வாக்கு வங்கியுடன் விளங்கி வருகிறது. இங்கு மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் என 6 தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வென்றது.

எனினும் 2016 சட்டமன்றத் தேர்தலில் இந்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 36 சட்டமன்றத் தொகுதிகளில், அதிமுக தனித்துப் போட்டியிட்டு 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக 12 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மதுரையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ண்ணன் 1,97,436 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கினார்.

2016 தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மேலூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வென்றது. மதுரை கிழக்கு, மதுரை மத்திய தொகுதிகளில் திமுக வென்றது. சட்டமன்றத் தேர்தல் வெற்றி விகிதம் பார்த்தால் சிவகங்கை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டும் அதிமுகவைவிட திமுக அதிக தொகுதிகளில் வென்றது.

மதுரை மண்டலத்தை பொறுத்தவரையில் இரு திராவிட கட்சிகளும் சமபலத்துடன் உள்ளது. தினகரனின் அமமுகவும் களத்தில் குதிக்கிறது. சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பிற தொகுதிகளுக்கு டிடிவி தினகரன் வலுவான வேட்பாளரையே அறிவிப்பார் என பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் திமுக வாக்குகள் சிதறுமா? அல்லது அதிமுக மற்றும் திமுக தங்கள் வாக்குகளை தக்க வைக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்போட்டியிலிருந்து வெகுவாக திமுக விலகியுள்ளது. மதுரை மண்டலத்தைப் பொறுத்தவரையில் திமுக பெரும்பாலான தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 5 தொகுதிகளையுமே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. திண்டுக்கல் தொகுதியில் மட்டும் திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது. அதிமுக மதுரை மற்றும் தேனியில் மட்டும் நேரடியாக களமிறங்கியுள்ளது. மதுரையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழுத்தாளர் எஸ்.வெங்கடேசன் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரையில் களமிறங்குகிறது.

யாருக்கு ஆதரவு?

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஒருவாரத்தில் தெரிவிப்பேன் மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் என்னை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மு.க. அழகிரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அதிமுகவிற்கு நெருக்கடி அதிகமாகவே இருக்கும்…