பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: செல்போன் வாயிலாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள் குவிகிறது…

Read Time:5 Minute, 1 Second

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வன்முறை விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள் குவிகிறது.

பொள்ளாச்சியில் பாலியல் அரக்கன்களால் பல ஆண்டுகளாக நடைபெற்ற பாலியல் வன்முறை 19 வயது கல்லூரி மாணவி கொடுத்த புகாரினால் அம்பலமானது. இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு(வயது27), இவனுடைய கூட்டாளிகளான சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24) ஆகியோரை போலீஸ் கைது செய்தது. இவ்வழக்கு விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு மாற்றியது. இப்போது சிபிசிஐடி போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

விசாரணைக்கு இடையே இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 200-க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் வெளிப்படையாக புகார்களை தெரிவிக்க முன்வரவில்லை. இதற்கிடையே புகார் கொடுப்பவர்களின் தகவல்கள் வெளியானது அவர்களை பின்னடைய செய்தது.

பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல் வெளியானதற்கு தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான தகவல்களை இன்டர்நெட்டில் இருந்து அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமாக புகார் கொடுக்க வரலாம் என்றும், அவர்களது பெயர், விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் எந்த சூழ்நிலையிலும் வெளியிடப்படாது, பாதிக்கப்பட்டவரின் புகாரை தொடர்ந்து உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு செய்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 94884 42993 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். [email protected] என்ற இணையதள முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என சிபிஐசிடி போலீஸ் செய்தியறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

குவியும் புகார்கள்

ரகசிய எண்கள் மற்றும் இ-மெயில் அறிவிப்பால் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வன்முறை விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள் குவிகிறது. அறிவிப்பு வெளியான பின்னர் கடந்த 2 நாளில் 160 பேர் போன் மூலம் புகார் செய்துள்ளனர். இவர்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து, அவற்றை பத்திரப்படுத்தி விசாரணை தொடங்கப்பட உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் பலர் சாட்சிகளாகவும் சேர்க்கப்பட இருக்கிறார்கள்.

“புகார் தெரிவித்துள்ளவர்களில் பலர் இதுபோன்ற குற்றவாளிகளை கையாள என்கவுண்டர் செய்யுங்கள்,” எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்று எங்களுடைய மாவட்டத்திலும் நடைபெறுகிறது என பிற மாவட்டங்களில் இருந்தும் சிபிசிஐடிக்கு புகார்கள் வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக திநியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புகார் தெரிவித்தவர்களின் தகவல்கள் விசாரணைக்கு வலுவான ஆதாரமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இ-மெயில் மூலம் சிலர் மட்டும் அனுப்பியுள்ள தகவலில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 2 குடும்ப பெண்களின் வீடியோ வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வீடியோவை இன்டர்நெட்டில் இருந்து அகற்றுமாறு அழுதுள்ளனர். அவர்களை நேரடியாக புகார் அளிக்க போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.