நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவிற்கு வாக்களிக்கப் போகிறீர்களா? இதை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்..

Read Time:5 Minute, 34 Second

நோட்டாவிற்கு வாக்களிக்க முடிவு செய்தால் உங்களுடைய கேள்விகளுக்கு இங்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. வாக்குப்பதிவு சதவிதத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வாக்களித்தே தீரவேண்டும் என்று நினைப்பார்கள்.

யாருக்கு வாக்களிப்பது என்ற யோசனை எல்லோர் மத்தியிலும் இருக்கும். நல்லவர்களுக்கு வாக்களிக்க முடியவில்லை. திரும்பத் திரும்ப திருடர்கள்தானே முளைக்கிறார்கள் என்கிற வெறுப்பின் காரணமாக சிலர் வாக்களிப்பதை தவிர்க்கலாம். சிலருக்கு நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கலாம். அப்படி யோசித்து இருந்தால் முடிவு எடுக்கும் முன்னதாக முக்கிய விஷயங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே ’49 ஓ’ என்று இருந்ததுதான், இப்போது ‘நோட்டா’வாகும்.

நோட்டா என்றால் என்ன?

விதி 49-O குடிமக்கள் ‘நிராகரிக்க உரிமை’ கொடுக்கிறது. நோட்டா என்பது வேட்பாளர்கள் யாரையும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க பயன்படும் வாய்ப்பாகும். இந்த தேர்வை வாக்கு பாட்டிலில் சேர்க்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டிடம் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி கடந்த 2013-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. தங்கள் தொகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் எந்த நம்பிக்கை இல்லை என்றால் நோட்டாவை தேர்வு செய்யலாம். இந்த விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் இரண்டு காரியங்களை உறுதி செய்ய முடியும்:


* வேட்பாளர்களின் மீதான அதிருப்தி / நம்பிக்கையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.


* உங்கள் வாக்கை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது.


2014 தேர்தலில் நோட்டாவிற்கு பதிவான வாக்கு

சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் கணிசமான வாக்குகள் நோட்டாவிற்கு கிடைத்தன. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது சுமார் 60 லட்சம் பேர் வரையில் நோட்டா என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்தனர். குறிப்பிடத்தக்க வகையில், அப்போதுதான் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 தேர்தல்களில் இன்று பலர் நோட்டாவை தேர்வு செய்யலாம் என தெரிவாகவே தோன்றுகிறது.

நோட்டாவிற்கு அதிகமான வாக்கு கிடைத்தால் என்னவாகும்?

தொகுதியில் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பட்டனை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். ஆனால் வெற்றி அறிவிப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது. நோட்டா வெறும் கணக்குக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். அதிகளவில் நோட்டா பதிவானாலும் அதற்கு அடுத்து எந்த வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளாரோ அவர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார்.

நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக் கொள்ளலாம். இந்திய சட்டப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்தரத்தின் கீழ், வேட்பாளர்களை பிடிக்கவில்லை எனில், வாக்காளர்கள் அதை வெளிபடுத்த அவர்களுக்கான ஓர் வாய்ப்பாக நோட்டா செயற்படும்.

தொகுதியொன்றில் நோட்டாவிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்தால் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. நோட்டாவிற்கு கணிசமான வாக்கு கிடைத்தாலே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

இப்போது நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் பற்றி பேசுவதற்கு சமூக வலைத்தளங்கள் வாய்ப்பு அளிக்கிறது, அதிருப்தியை தெரிவிக்க இடம் கொடுக்கிறது. அதுபோல் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நோட்டாவிற்கு சமூக வலைதளங்களில் இருந்து என்ன வித்தியாசம் இருக்குமோ? என்ற கேள்விதான் எழுகிறது.

எதுவாகினும் வாக்களிப்பதை தவிர்க்காதீர்கள்… ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்….