வேட்பாளர்கள் டெபாசிட் தொகை எவ்வளவு? திரும்ப பெறுவது எப்படி? தெரிந்துகொள்வோம்

Read Time:3 Minute, 29 Second

இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.மே மாதம் 23-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 18-ம் தேதி (வியாழக் கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மார்ச் 19-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 26 மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுக்கள் மீது பரிசீலனை மார்ச் 27-ல் நடைபெறும். மனுவை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 29 ஆகும்.

வாகுப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதியும் நடைபெறுகிறது.

இனி வேட்பாளர்கள் டெபாசிட் தொகை தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்வோம்.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட அளவிலான தொகையை செக்யூரிட்டி டெபாசிட்டாக செலுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இத்தொகை மாறுபடும்.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். அதுவே சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், பிறதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரம் டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.


பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றால் டெபாசிட் தொகையில் 50 சதவீத சலுகையைப் பெறலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பேட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.12 ஆயிரத்து 500, பிறதேர்தலுக்கு பேட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரமும் டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.


வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதியில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கை பெறாத பட்சத்தில் அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகையை இழந்தவர்களாக கருதப்படுவார்கள்.


வேட்பாளர்கள் தொகுதியில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கை பெறும் பட்சத்தில் டெபாசிட் பணத்தை திரும்ப பெறலாம்.


2014 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 8,748 வேட்பாளர்களில் 7,502 வேட்பாளர்கள் தங்களுடைய டெபாசிட்டை இழந்தனர். பா.ஜனதா 62 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. காங்கிரஸ் 179 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அதிகப்பட்சமாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் காட்சி 501 தொகுதிகளில் 445 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது.