பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளி தப்பிக்க உதவிய போலீசார்…! திடுக்கிடும் தகவல்

Read Time:4 Minute, 24 Second

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு தப்பிக்க போலீசார் உதவினர் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு ஆந்திராவிற்கு தப்பிவிட்டு பின்னர் தமிழகம் திரும்பிய போது கைது செய்யப்பட்டவன். ஏற்கனவே இவ்விவகாரத்தில் நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களை மிரட்ட அடையாளம் வெளியிடப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவை சிபிசிஐடி போலீஸ் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளது. விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசும் அவனது நண்பர்களும் தங்கள் வலையில் விழுந்த பெண்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது. அப்போது போலீசாரும் விசாரணையை தொடங்கினார்கள். ஆனால் அரசியல் பிரமுகர்களின் உதவியால் விசாரணை வளையத்துக்குள் சிக்காமல் இந்த கும்பல் தப்பியது. இதற்காக பல லட்சம் ரூபாய் போலீசாருக்கு கைமாறியதாகவும், அப்போதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை இந்த அளவிற்கு பூதாகரமாகி இருக்காது என்றும் புகார்கள் வந்துள்ளன.

மாணவி ஒருவர் புகார் கொடுக்கவும் விவகாரம் பூதகரமாகியது. இதனையடுத்து திருநாவுக்கரசு தலைமறைவானார். அவரை வெளிமாநிலத்துக்கு தப்பி செல்லுமாறு போலீஸ் அதிகாரிகள் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பே இந்த பிரச்சினை போலீசாரின் கவனத்துக்கு வந்த போது திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? திருநாவுக்கரசை வெளிமாநிலத்துக்கு தப்பி செல்ல கூறிய போலீஸ் அதிகாரிகள் யார்? என்பன போன்ற விவரங்கள் தற்போது திருநாவுக்கரசிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதால் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

வீடியோவை பகிரக் கூடாது

பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிரக் கூடாது என சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் முகநூல், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில் பரவியது குறித்தும், பரப்பிய நபர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கைதானவர்களின் முகநூல் நண்பர்கள் பட்டியலில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் இல்லங்கள், பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின. இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக தகவல்கள் அறிந்தவர்கள் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.