இந்தியாவில் 2019 தேர்தலுக்கு புதியதாக 149 கட்சிகள் பதிவு…! மொத்தம் 2,293 கட்சிகள்…!

Read Time:4 Minute, 33 Second

இந்தியாவில் இப்போது மொத்தம் 2,293 அரசியல் கட்சிகள் உள்ளன என தேர்தல் ஆணைய தரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இப்போது உள்ள மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தரவு வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக மார்ச் 9-ம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தகவல் அடங்கியுள்ளது. இப்போது இந்தியாவில் மொத்தம் 2,293 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் 59 இதில் அடங்கும்.


தேர்தலையொட்டி காளான் போன்று உருவாகும் புதிய கட்சிகளுக்கு பின்னால் ஊழல்?


கடந்த ஜனவரியில் இருந்து மார்ச் 9-ம் தேதி வரையில் 149 கட்சிகள் பதிவாகியுள்ளது. இதுவே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஷ்கார் மாநிலங்களில் கடந்த நவம்பர்-டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது 58 கட்சிகள் புதிய கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து புதிய தலைமுறை மக்கள் கட்சியும் புதிய கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டவையா?

புதிய கட்சிகள் வெறுமனே பதிவு செய்யப்பட்ட கட்சி மட்டுமே. விதிமுறைகளின்படி மாநில அல்லது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறுவதற்கு, சட்டமன்றத் தேர்தலில் அல்லது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான சதவித வாக்குகளை பெற வேண்டும் அல்லது சில எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். இக்கட்சிகள் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் கிடையாது. இந்த கட்சிகள் வழங்கப்பட்ட இலவச சின்னங்கள் பட்டியலிருந்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தற்போது 84 இலவச சின்னங்கள் உள்ளது.

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உருவாகும் கட்சிகளா?

இத்தகைய கட்சிகள் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. சில கட்சிகள் செயல்பாட்டில் இல்லை என்பதையும் தேர்தல் ஆணையம் கண்டறிந்தது.

2016-ம் ஆண்டு நிதி கட்டமைப்பு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (சிபிடிடி) தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் கிடைக்கும் நிதி பங்களிப்பை தவறான முறையில் பயன்படுத்தி இருக்கலாம் என தேர்தல் கண்காணிப்பகம் அச்சம் தெரிவித்தது. இப்படி கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடாத இக்கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. 225 அரசியல் கட்சிகளை பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன?

தேர்தல் சட்டங்களின்படி எந்தஒரு கட்சியையும் பதிவில் இருந்து நீக்குவதற்கு போதுமான அதிகாரம் கிடையாது.

இருப்பினும் அரசியலமைப்பின் 324-வது சட்டப்பிரிவின்படி தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம், செயலற்று மற்றும் நீண்ட நாட்களாக தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கலாம். விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்ய அதிகாரம் வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை சட்ட அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது.