‘மரங்களின் தாய்’ சாலு மரத திம்மக்கா

Read Time:9 Minute, 34 Second
Page Visited: 201
‘மரங்களின் தாய்’ சாலு மரத திம்மக்கா

பிபிசி வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற கர்நாடகாவை சேர்ந்த 106 வயதான பாட்டி சாலு மரத திம்மக்கா, இன்றும் மரம் நடும் தன்னுடைய பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறார். கர்நாடக மாநிலம்  குனிகல் – குதூர் இடையிலான சாலையில் செல்லும் போது இயற்கை அன்னையின் வரபிரசாதமாக குளிர்காற்றுடன் மரங்கள் தலையசைத்து வரவேற்கிறது. சில மணித்துளிகள் இங்கு நின்று செல்ல மாட்டோமா? செல்வோம் என யோசிக்கும், ரசிக்கும் பயணிகள் பலர். பாலைவனமாக இருந்த கிராமத்தை சோலைவனமாக மாற்றியிருப்பது 106 வயதான பாட்டி சாலு மரத திம்மக்காதான். சாலையில் வரிசையாக நிற்கும் 500-க்கும் மேற்பட்ட ஆலமரங்களுக்கு தாய் யாரென்றால் திம்மக்கா பாட்டிதான்.

திம்மக்கா பாட்டி தன்னுடைய பசுமை சேவைக்காக, சிறந்த தேசியக் குடிமகன் விருது, குடியரசு தலைவர்கள், பிரதமர்கள், பல முதல் அமைச்சர்களிடம் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று அவரை உலகே இயற்கையின் அன்னையென்றே பாராட்டுகிறது. திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட இப்போது முதுமையில் தனிமையில் இருக்கிறார். சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் கிடையாது. கண் பார்வை அவ்வளவு துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். இன்று வீட்டு வேலைகளை அவரே பார்த்துக்கொள்கிறார். கடின உழைப்பாளியான பாட்டியின் உணவு ராகி களி,  சிவப்பு மிளகாய், மிளகு, பருப்பு விதைகள், தேங்காய், புளி, உப்பு ஆகியவற்றினால் செய்யப்படும் குழம்புதான். எப்போதாவது ஆசைப்பட்டால் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை சாப்பிடுவேன் என்கிறார்.

இன்று உலகமே கொண்டாடும் திம்மக்கா பாட்டிக்கு இழமைகாலம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. தனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையென கூறும் திம்மக்கா பாட்டி, 1928-ம் ஆண்டு 20 வயதில் திருமணம் செய்ததாக கூறுகிறார். திருமணம் செய்து 20 ஆண்டுகள் அவருக்கு குழந்தைகள் இல்லை. அப்போது அவருக்கு உதித்த யோசனைதான் மரங்களாக ஊருக்கே நிழல் கொடுக்கிறது.

இதுதொடர்பாக திம்மக்கா பாட்டி பேட்டியொன்றில் பேசுகையில், திருமணமாகி 10 வருஷம் மேலாகியும் குழந்தை கிடையாது. போகாத கோவில் கிடையாது… விரதம் இருந்து, இருந்து உடம்புதான் வீணானது. அக்கம் பக்கத்தார் ஜாடை மாடையா பேசிய பேச்சுக்கள் உயிரை இழுக்கும். காட்டுல வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்பினா சாப்பாடுகூட இறங்காது. தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்றும் யோசித்தேன். அப்போதுதான் ”வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..?” ஆண்டவனோட படைப்பில் ஆடு, மாடு, மரம், செடி, கொடியெல்லாமே உயிருதான் என்கிற உண்மையை உணர்ந்தேன்.

ஆங்காங்காங்கே கிடைத்த மரச்செடிகளை கொண்டு குழி வெட்டி, அதனை நடுவு செய்தேன். தண்ணிவிட்டு…  செடியையே புள்ளையா வளர்ப்போம் என்று தொடங்கினேன். இப்போது என்னுடைய புள்ளைங்க வளர்ந்து இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல… ஊருக்கே நிழல் கொடுக்கிறது என்று வாழ்வில் கிடைத்த மகிழ்ச்சியை தெரிவித்தார். திம்மக்கா பாட்டியின் முயற்சிக்கு அவருடைய கணவரும் உதவி செய்துள்ளார். வறட்சியின் போதும் நெடும் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவந்து இந்த மரங்களை வளர்த்துள்ளார்.

அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான் இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது.. மக்கள் பாராட்டுகையில் “நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது…!” என்கிறார் திம்மக்கா பாட்டி. மரம் நடும், பராமரிக்கும் தன்னுடைய பணியை இன்றளவும் செய்து வருகிறார்.

பத்மஸ்ரீ விருது

கடந்த 65 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் உள்பட 8 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை திம்மக்கா பாட்டி நட்டு வளர்த்து இருக்கிறார். மரங்களை வெறுமனே நட்டுவிட்டு செல்லாமல் அவற்றை தொடர்ந்து பராமரித்தும் வந்திருக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு அவரது கணவர் மரணமடைந்தார். எனினும் திம்மக்காவின் மரங்கள் மீதான காதல் தொடர்ந்தது. திம்மக்காவின் இந்த சேவைக்காக அவரை ‘மரங்களின் தாய்’ என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர்.

இந்த அரிய பணிகளுக்காகவே அவருக்கு பத்மஸ்ரீ விருதும் தேடி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. “மரங்களின் தாய்” என்று அழைக்கப்படும் திம்மக்கா பாட்டிக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.  சாலுமரதா திம்மக்கா (வயது 106) பாட்டி பத்மஸ்ரீ விருது பெறுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்தார். அங்கு அவர் விருதுக்காக அழைக்கப்பட்ட போது ஜனாதிபதியை நோக்கி புன்சிரிப்புடன் வந்தார். அவரிடம் பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுக்குமாறு கூறினார்.

திம்மக்கா பாட்டி ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார்

ஆனால் அந்த பாட்டி திடீரென ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். இதை எதிர்பார்க்காவிட்டாலும், திம்மக்காவின் அந்த எளிய அன்பை ஜனாதிபதி பணிவுடன் தலை குனிந்து ஏற்றுக்கொண்டார். விருது விழா மற்றும் ஜனாதிபதி மாளிகையின் நடை முறைகள் மற்றும் விதிகளை மீறி திம்மக்கா செய்த இந்த நெகிழ்ச்சி சம்பவம், அரங்கில் இருந்த பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது. எனவே அவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி திம்மக்காவை பாராட்டினர்.

ஆலமரம் இந்தியாவில் ஒரு புனிதமான மரமாகவும், பெண் மலட்டுத்தன்மைக்கு இயற்கையான நிவாரணமாகவும் கருதப்படுகிறது. வளர்ந்து பெரியதான மரங்கள் எனது மனதை மகிழ்விக்கிறது, ஆனால் அழிந்து போன மரங்கள் வருத்தத்தை அளிக்கிறது. மரங்கள் தனக்கு மகிழ்ச்சியையும், தனது காயத்திலிருந்து விடுபடவும் உதவுகின்றன என்று கூறுகிறார் திம்மக்கா பாட்டி. அவருடைய பணியை தொடர்ந்து மகிழ்ச்சியாக செய்கிறார். தன்னை சூழ்நிலை ஆர்வலர் என காட்டிக்கொள்ள விரும்புவது கிடையாது. மரங்களை நடுவதிலும், அதனை பராமரிப்பதிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடுத்தியுள்ளார்.

நாமும் திம்மக்கா பாட்டியிடமிருந்து ஊக்கம் பெற்று, நாளை தலைமுறைக்கு இயற்கையான, தூய்மையான சுற்றுசூழலை கொடுக்க மரங்களை நடுவோம். பூமியை காப்போம்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %