ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் – அதிமுக தேர்தல் அறிக்கை

Read Time:3 Minute, 49 Second

ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் – அதிமுக தேர்தல் அறிக்கை

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மாதா மாதம் ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-


நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி மாதந்தோறும் ரூ.1500 வழங்கும் அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் நிறைவேற்றப்படும். ஏழை மக்களுக்கு மாதாந்திர நேரடி நிதி உதவி திட்டமாக இது செயல்படுத்தப்படும்.


கைவிடப்பட்ட பெண்கள், வருமானமற்ற விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர், கிராமத்தில் உடல் உழைப்புத் தொழிலாளர்கள், முதியோர் ஆகியோருக்கு மாதந்தோறும் அவரவர் வங்கில் கணக்கில் ரூ.1500 செலுத்த மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரை நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெருமளவு மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து வறட்சியான பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.


காவரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்துவோம்.


இதுபோல நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழகத்தில் மூன்று முக்கிய நீர் மேலாண்மை திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படும்.


பேரறிவாளர் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவிடுமாறு அதிமுக சார்பில் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்படும்.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.


மதம் மாறினாலும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.


காவிரி டெல்டாவை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.


பொது சிவில் சட்டத்தை எந்த விதத்திலும் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்படும்.


தமிழ் மொழியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்துவோம்.


கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற மாநில அரசு வலியுறுத்தும்.


மருத்துவப் படிப்பில் சேர அவசியமான நீட் தேர்வை ரத்து செய்யுமாறு வலியுறுத்துவோம்.


மலை வாழ் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்கப்படும் வகையில் தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க அதிமுக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.