சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் பற்றிய பிரச்சனைக்குரிய பாடம் நீக்கம்; 10 தகவல்கள்

Read Time:4 Minute, 54 Second

மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அங்கீகாரம் பெற்று 19 ஆயிரம் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இந்தியா முழுவதும் உள்ளன. இந்த பள்ளிகளின் பாடத்திட்டத்தையும், பாடத்தையும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் தயாரிக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்தியன் காலனி ஆதிக்கம் என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. 168-வது பக்கத்தில் சாதி மற்றும் மோதலும்; ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் நாடார் சமுதாயம் குறித்து பிரச்சினைக்குரிய தகவல்கள் இடம் பெற்றது. இதனை நீக்கக்கோரி மேற்கொள்ள போராட்டம் நடைபெற்றது. இப்போது பாடப்புத்தகத்திலிருந்து நாடார் சமுதாயம் குறித்தான பிரச்சனைக்குரிய பாடம் நீக்கப்பட்டது.

தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 தகவல்கள்:-


1) தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்த இந்த பாடப்புத்தகம் 2006-07 கல்வியாண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டது.


2) அதில், கன்னியாகுமரி பகுதியின் பூர்வகுடிகள் மலையாள நாயர்கள் என்றும் நாடார்கள் பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்தவர்கள் என்றும் மலையாள நாயர்களுக்கு நாடார்கள் அடிமைகளாக இருந்தது போன்ற தோற்றம் ஏற்படும் வகையிலும் இருந்தது.


3) நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதனால் அவர்களுக்கு ஆடை அணியும் உரிமை கிடைத்ததாகவும் பாடத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.


4) நாடார் சமூகத்திற்கும், அக்குலப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்து அய்யா வைகுண்டநாதர் தலைமையில் அறப்போராட்டம் வீறுகொண்டு எழுந்தது. ஆனால் ஆடை சீர்திருத்தத்தில் அய்யா வைகுண்டநாதர் போன்ற இந்து சீர்திருத்தவாதிகளும் பங்கேற்றனர் என்ற அரை வரியில் தெரிவிக்கப்பட்டது.


5) நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் நீண்ட காலத்துக்கு முன்பே கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் பாடம் முழுவதும் இப்பெயரே குறிப்பிடப்பட்டது. ஒரேஒரு இடத்தில் மட்டும் பின்னாளில் நாடார்கள் என்றழைக்கப்பட்டனர் என அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டது.


6) இவை அனைத்தும் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விஷமான செயல்களாகும் என போராட்டம் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இப்பகுதியை நீக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டது, அரசுக்கு கோரிக்கையும் அனுப்பப்பட்டது.


7) இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட தவறான தகவல்களை நீக்கவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். பிரச்சினைக்குரிய பாடத்தை நீக்கவேண்டும் என்று முதல் -அமைச்சர் ஆக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.


8) நாடார் சமுதாயம் குறித்து தெரிவிக்கப்பட்ட தவறான தகவல்களை அகற்றவேண்டும் என்று 2016-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டது.


9) பின்னர் திருத்தம் செய்யப்பட்ட போதும் புத்தகத்தில் சர்ச்சை தொடர்ந்தது. மீண்டும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது. பாடத்தை நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.


10) இப்போது நாடார் சமுதாயம் குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான சுமையை குறைக்கும் வகையில் புத்தகத்தில் 70 பக்கங்களை கொண்ட 3 பாடங்கள் நீக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் இருந்து புதிய புத்தகம் பயன்பாட்டுக்கு வருகிறது.