கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே? ‘நோ கமண்ட்ஸ்’ நிரவ் மோடி கடுப்பு…!

Read Time:2 Minute, 38 Second

கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு நிரவ் மோடி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிவிட்டார். இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரிக்கிறது. லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி எப்படி ஆடம்பரமாக வாழ்கிறார் என்பதை தி கார்டியன் பத்திரிக்கை வெளிப்படுத்தியது. இதனையடுத்து அவரை நாடு கடுத்துவதற்கான பணியில் இந்திய அரசு முனைப்பு காட்டியது.

வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை லண்டன் உள்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதையொட்டி இவ்வழக்கில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நிரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த தகவல் அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே நிரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார். இந்த உத்தரவை எப்போது லண்டன் போலீஸார் செயல்படுத்தப் போகிறார்கள் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால், விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் லண்டனின் அவரை கண்டுபிடித்த இந்திய தொலைக்காட்சி செய்தியாளர், நீதிமன்றத்தின் கைது செய்ய வாரண்ட், புதிய தொழில் தொடக்கம், வழக்கு தொடர்பாக உங்களுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேள்வியை எழுப்பியுள்ளார். வழக்கம்போல நிரவ் மோடி பதில் கிடையாது என கூறியுள்ளார், ஆனால் தொடர் கேள்வியால் கடுப்பாகிவிட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் நின்றுவிட்டார்.

லண்டன் கோர்ட்டு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது தொடர்பான கேள்விக்கு ‘நோ கமண்ட்ஸ்’ (பதில் இல்லை) என கூறிவிட்டார்.