மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்… கருத்துக்கணிப்பு முடிவு

Read Time:4 Minute, 38 Second

மத்தியில் ஆட்சியை பிடிக்க 543 இடங்களில் 272 இடங்களில் வெற்றிப்பெற வேண்டும். இந்த இடங்களை தாண்டி பா.ஜனதா கூட்டணி வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 283 தொகுதிகள் கிடைக்கும் எனவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 135 தொகுதிகள் கிடைக்கும் எனவும் மற்றவை 125 இடங்களை கைப்பற்றும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்களில் எப்படி?

543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 249 தொகுதிகளை (45%) உத்தரபிரதேசம் (80), மராட்டியம் (48), மேற்கு வங்காளம் (42), பீகார் (40), தமிழகம் (39) ஆகிய ஐந்து பெரிய மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் பா.ஜனதா 42 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி 39 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் – பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், பா.ஜனதா 11 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும். பீகாரில் பா.ஜனதா கூட்டணிக்கு 27 தொகுதியும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரு மெகா கூட்டணிகள் அமைந்துள்ளது. டிடிவி தினகரன், கமல்ஹாசன் உள்பட பிற கட்சிகளும் தனியாக போட்டியிடுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மிகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிச்சாமி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களையும், அதிமுக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும். காங்கிரஸ், திமுக கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 52.20 சதவித வாக்குகளையும், அதிமுக, பா.ஜனதா., பாமக, தேமுதிக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 37. 20 சதவித வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10.60 சதவித வாக்குகளை கைப்பற்றும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் எப்படி?

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் கம்யூனிஸ்ட் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றும். ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 22 இடங்களையும், தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 13 தொகுதிகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு தொக்தியிலும், பா.ஜனதா கூட்டணி 2 தொகுதியிலும், மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றிப்பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கூட்டணிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 16,931 பேர் கலந்துக்கொண்டனர். இடைக்கால பட்ஜெட், பாகிஸ்தானில் விமானப்படை தாக்குதல் ஆகிய காலக்கட்டங்களுக்கு இடையில் எடுக்கப்பட்டுள்ளது.