“தான் பிடிபட்டதும், தேசத்தையே காவலாளி ஆக்கிவிட்டார்…” பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி

Read Time:2 Minute, 35 Second

பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் சிக்கிக்கொண்டதும், தேசத்தையே காவலாளியாக்கிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி பிரசாரம் செய்கையில், இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் என்றார்.

ரபேல் விவகாரத்தை அடுத்து பிரதமர் மோடி காவலாளியாக இருப்பேன் என்று கூறியதை மையப்படுத்தி அவ்வப்போது காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. இப்போது காங்கிரசின் இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் டுவிட்டரில் பிரசாரம் ஒன்றை தொடங்கியுள்ள பிரதமர் மோடி, காவலாளி என்ற பெயரை பொதுமையாக்கிவிட்டார். ஊழல் சமூக கொடுமைக்கு எதிராக போராடும் அனைவருமே காவலாளிதான் என பிரதமர் மோடி கூறினார். இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகாவில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி இப்போது சவுகிதார் நரேந்திர மோடி(காவல்காரர் நரேந்திரமோடி) என்று வெளியிட்டு நானும்கூட காவல்காரன் என்று பிரச்சாரம் செய்கிறார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தவர் மோடி. அவர் அதில் சிக்கியதும், இந்த தேசத்தையே காவல்காரராக்கிவிட்டார். இதற்கு முன் ஒருமுறை கூட இந்த தேசத்தை காவலாளியாக்கப் போகிறேன் என்று கூறியதில்லை.

மக்கள் என்னை பிரதமராக்கவில்லை, என்னை காவல்காரராக்கி இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால், இப்போது, ஒட்டுமொத்த தேசத்தையே காவல்காரராக்கி இருக்கிறார். யாருக்கு மோடி காவல்காரராக இருந்திருக்கிறார் ?. அனில் அம்பானி, மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியோருக்குத்தான் பிரதமர் மோடி காவல்காரராக இருந்துள்ளார் என கடுமையாக சாடினார். அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்ற முயற்சிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.