உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது…! காங்கிரசுக்கு கைவிரித்த ஆம் ஆத்மி

Read Time:3 Minute, 46 Second

டெல்லியில் காங்கிரசுடன் கூட்டணியில்லை என ஆம் ஆத்மி கூறிவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் டெல்லியில் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. காங்கிரசுக்கு எதிரான கொள்கையில் ஆட்சிக்குவந்த அரவிந்த் கெஜ்ரிவால், இப்போது பா.ஜனதாவிற்கு எதிரான கொள்கையில் காங்கிரசுடன் ஒத்துப்போகிறார். எனவே இரு கட்சிகளும் டெல்லியில் கூட்டணி வைக்கலாம் என பார்க்கப்பட்டது.

டெல்லியில் காங்கிரசுக்கு 2 தொகுதிகள் வரையில் தருவதாகவும், பஞ்சாப்பிலும் கூட்டணியாக போட்டியிடலாம் எனவும் ஆம் ஆத்மி கூட்டணிக்கு முன்வந்தது. பஞ்சாப்பில் 2014 தேர்தலில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வெற்றிப்பெற்று 24.40 சதவித வாக்குகளைப் பெற்றது. 2017 சட்டமன்றத் தேர்தலிலும் 20 தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவிதத்தில் இரண்டாவது இடம் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப்பில் அக்கட்சியுடன் கூட்டணிக்கு கெஜ்ரிவால் முனைப்பு காட்டினார்.

இதற்கிடையே டெல்லியில் 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்தது. ஒரு தொகுதியை வைத்திருந்தது. காங்கிரசுக்கு இரண்டு தொகுதி வரையில் தரவும், பஞ்சாப்பில் கூட்டணி வைக்கவும் தொடர்ந்து ஆம் ஆத்மி முனைப்பு காட்டியது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலால் டெல்லியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஷீலா திட்சீத் “ஆம் ஆத்மியுடன் கூட்டணியில்லை, இது இறுதியானது. இந்த முடிவை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்,” என்றார். ஆம் ஆத்மி கூட்டணி விவகாரத்தில் டெல்லி காங்கிரஸ் கட்சியிடம் இருவேறு கருத்துக்கள் நிலவியது.

ராகுல் காந்தியும் தொண்டர்கள் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிப்பெற பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த போட்டியால் வாக்குகள் சிதறும் என பார்க்கப்படுகிறது. இதுவரையில் வெளியான கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு சாதமான நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி என்ற நோக்கில் காங்கிரஸ் நகர்வதாக தகவல் வெளியாகியது. ஆனால் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என ஆம் ஆத்மி கூறிவிட்டது.

ஆம் ஆத்மி தலைவர் கோபால் ராய் பேசுகையில்,“காங்கிரசுக்காக நாங்கள் நீண்ட நாள் காத்திருந்தோம்.. ஆனால் காங்கிரஸ் அகங்காரத்துடன் நடந்து கொண்டது. ஆம் ஆத்மி காத்திருந்தால் பா.ஜனதாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு பெரும் பின்னடைவாக அமையும்,” என கூறிவிட்டார். மார்ச் 23-ம் தேதி ஆம் ஆத்மி பிரசாரத்தை தீவிரப்படுத்துகிறது. காங்கிரசுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் என மும்முனைப் போட்டிக்கு வழி ஏற்பட்டுள்ளது.